search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் ரூ.100 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 16 பேர் கைது
    X

    உத்தரபிரதேசத்தில் ரூ.100 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 16 பேர் கைது

    உத்தரபிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். #demonetisedcurrency
    கான்பூர்:

    உத்தரபிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

    உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள ஸ்வருப் நகரில் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் மேற்படி பழைய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் இது குறித்து மாநில போலீசாருக்கு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கட்டுமானப்பணி நடந்து வரும் அந்த கட்டிடத்தில் உத்தரபிரதேச போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கே பல கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவற்றை எண்ணிப்பார்த்த போது அதில் சுமார் ரூ.100 கோடி இருந்தது தெரியவந்தது. அந்த பணம் 5 தனி நபர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு சொந்தமானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பிரபலமான டிடர்ஜென்ட் நிறுவனமும் ஒன்றாகும்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 16 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் 2 பேர் ஆந்திராவையும், ஒருவர் மராட்டியத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த பணத்தை சட்ட விரோதமாக மாற்றுவதற்காக அங்கே பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஒரே இடத்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் மிகப்பெரிய அளவில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  #demonetisedcurrency #tamilnews
    Next Story
    ×