search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமதத்தினர் 44 பேருக்கு நோட்டீஸ்
    X

    திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமதத்தினர் 44 பேருக்கு நோட்டீஸ்

    திருப்பதி தேவஸ்தானத்தில் விதியை மீறி பணியாற்றும் வேற்று மதத்தினர் 44 பேருக்கு தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    திருமலை:

    திருப்பதி கோவிலுக்கு தினமும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருகிறார்கள். விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சம் வரை அதிகரிக்கும்.

    இவர்களுக்கு உணவு, குடிநீர், போக்குவரத்து, தங்கும் அறை, லாக்கர் வசதிகள், முடி இறக்குவதற்கான இடங்கள் என அனைத்து வசதிகளும் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

    லட்டு தயாரிப்பு, பராமரிப்பு, வரவு-செலவு கணக்கு உள்பட அனைத்தும் தனித்தனி துறைகளாக பிரிக்கப்பட்டு வெளிப்படையாகவே நடந்து வருகிறது.

    கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் 15 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் பூவாரி தொண்டு செய்யும் சேவகர்கள் மூலம் நடக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தினர் பணியில் அமர்த்த கூடாது என்ற விதி உள்ளது.

    தற்போது திருப்பதி கோவில் தேவஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்த பின் மதம் மாறியவர்கள் என்று பலர் பணியில் உள்ளனர்.

    தேவஸ்தானத்தில் வேலைக்கு சேருபவர்கள், இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை 1989-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதற்கு முன் இந்த நிபந்தனை கிடையாது.

    இந்த நிலையில் தேவஸ்தான ஊழியர் நலப் பிரிவில் துணை நிர்வாக அதிகாரியாக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் தேவஸ்தானம் கொடுத்த காரில் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று வருவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அவர் தேவஸ்தான காரில் தேவாலயத்துக்கு சென்ற படம் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தேவஸ்தான ஊழியர்கள் நலப்பிரிவு அலுவலக வளாகத்தில் ஏழுமலையான் உருவ படம் உள்ளது. ஊழியர்கள் பணிக்கு வரும் போது ஏழுமலையானை வணங்கி வந்தனர். இதனை தவிர்ப்பதற்காக அந்த பெண் அதிகாரி அலுவலகத்தின் பின்பக்க வாசல் வழியாக பணிக்கு சென்று வந்தாகவும் ஊழியர்கள் கூறினர்.

    இந்த நிலையில் வேற்றுமத பணியாளர்கள் விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.

    இதையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் வேற்று மதத்தை சேர்ந்த 44 பேர் பணியில் உள்ளது தெரியவந்துள்ளது. அந்த 44 பேருக்கும் தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    தேவஸ்தானத்தில் வேலை செய்யும் வேற்று மதத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews

    Next Story
    ×