search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு டிச.26ம் தேதி வருகை - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு டிச.26ம் தேதி வருகை - அமைச்சர் ஜெயக்குமார்

    ஒக்கி புயல் பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய குழு வரும் 26-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
    புதுடெல்லி:

    அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர்.

    இந்த பிராந்தியங்களை உருக்குலைத்த ‘ஒக்கி’ புயல் பின்னர் லட்சத்தீவிலும் தனது கொடூர முகத்தை காட்டியது. அங்கும் பல பகுதிகள் புயலுக்கு இரையாகி உள்ளன. அங்கும் கடற்கரை பகுதிகள் சின்னாபின்னமாகி விட்டன.

    ‘ஒக்கி’ புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படையினர் ஈடுபட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடமும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், புயல் பாதிப்பு அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் இன்று வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் வரும் 26-ம் தேதி மத்திய குழு ஆய்வுப்பணிக்காக தமிழகம் வர உள்ளதாக கூறினார்.

    புயல் நிவாரண நிதியாக 8,426 கோடி ரூபாய் கோரியுள்ளதாகவும், கன்னியாகுமரியில் நிரந்தர ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் பேசினார்.
    Next Story
    ×