search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்துக்கு டிராக்டரில் வந்த இந்திய தேசிய லோக்தள எம்.பி.
    X

    பாராளுமன்றத்துக்கு டிராக்டரில் வந்த இந்திய தேசிய லோக்தள எம்.பி.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அரியானா மாநில எம்.பி.யான துஷ்யந்த் சவுதாலா டிராக்டரில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மக்களவை தொடங்கியதும் புதிய மந்திரிகளை  பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்.பி.க்களும் கலந்துகொண்டனர். 

    இந்த கூட்டத்தொடரில் அரியானா மாநிலம் ஹிசார் மக்களவை தொகுதி எம்.பி.,யான துஷ்யந்த் சவுதாலா கலந்துகொண்டார். அவர் இந்திய தேசிய லோக்தள கட்சியை சேர்ந்தவர். விவசாயியான அவர் இந்திய பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வயது எம்.பி.யாவார். அவருக்கு தற்போது 29 வயதுதான் ஆகிறது. அவர் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவராக உள்ளார்.



    இந்நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக துஷ்யந்த் சவுதாலா டிராக்டரில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த டிராக்டரை அவரே ஓட்டி வந்தார். அவர் பாராளுமன்ற எல்லைக்குள் டிராக்டருடன் நுழைய முற்பட்டபோது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    இதையடுத்து டிராக்டரில் வருவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற்று விட்டதாக துஷ்யந்த் சவுதாலா தெரிவித்தார். எனவே அவரை போலீசார் பாராளுமன்ற வளாகத்தினுள் டிராக்டரில் செல்ல அனுமதித்தனர்.

    இதுகுறித்து துஷ்யந்த் சவுதாலா கூறுகையில், ‘புதிதாக திருத்தம் செய்யப்பட இருக்கும் மோட்டார் வாகன சட்டத்தின்படி டிராக்டரை வேளாண் வாகன பட்டியலில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி செய்யப்பட்டால் டிராக்டரின் விலை அதிகரிக்கும். அதோடு டிராக்டர்களுக்கான  சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரிக்கப்படும். இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதில் மாற்றம் செய்யப்படும் வரை, பாராளுமன்றத்துக்கு டிராக்டரில் தான் வருவேன். இதுகுறித்து நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திலும் குரல் எழுப்பினேன்’, என கூறினார்.


    Next Story
    ×