search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் சட்டம்: அமராவதியில் அறிமுகம்
    X

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் சட்டம்: அமராவதியில் அறிமுகம்

    ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக உருவாகும் அமராவதியில் கடமையாற்ற தவறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு பணியாளர்களை திரும்பப் பெறும் புதிய சட்டம் விரைவில் அறிமுகமாகிறது.
    ஐதராபாத்:

    ஆந்திரா மாநிலத்தின் தலைநகரமாக விளங்கிவந்த ஐதராபாத் நகரம் சமீபத்தில் பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்து விட்டதால் ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாக்கப்படுகிறது.

    அருகாமையில் உள்ள விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகளையும் ஒருங்கிணைத்து சுமார் 8,603 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ள அமராவதி பிராந்தியத்தில் தலைநகரம் அமராவதியின் மொத்த பரப்பளவு சுமார் 217 சதுர கிலோமீட்டராக இருக்கும்.

    ஒரு பெருநகரத்துக்கு தேவையான மக்கள் தொகை உயரும்வரை அமராவதி நகரத்துக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல்கள் தற்போது நடத்தப்படாது. ஒருங்கிணைந்த பெருநகர குழுமம் என்ற பெயரில் வரிவிதிப்பு உள்ளிட்ட நகரின் நிர்வாக இயந்திரம் செயல்படும்.


    இந்த தலைநகரை நிர்வகிப்பதற்காக ஆந்திர தலைநகர மேம்பாட்டு குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. அமராவதி பகுதியின் ஆட்சிமுறை எப்படி அமைய வேண்டும்? என்பது தொடர்பாக இந்த குழுமம் திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.

    தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரமாக அமையும் அமராவதியில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாக்காளர்கள் பங்கேற்கும் வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்படும். சரியாக பணியாற்றாத அரசு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட (அமராவதி பகுதிக்குட்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்) மக்கள் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தின்போது பொதுமக்களின் குறைகளுக்கு உரிய பதிலும் விளக்கமும் அளிக்க வேண்டும்.

    அவர்களின் பதில் திருப்தி அளிக்காதபட்சத்தில் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் சட்டம் இயற்றப்படவுள்ளதாக ஆந்திர தலைநகர மேம்பாட்டு குழுமம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×