search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் வாடிக்கையாளர் முதலீட்டை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி
    X

    வங்கிகளில் வாடிக்கையாளர் முதலீட்டை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி

    நிதி தீர்வு மசோதா பற்றி வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால், வங்கிகளில் வாடிக்கையாளர் முதலீட்டை பாதுகாக்க அரசு பாடுபட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    நிதி தீர்வு மசோதா பற்றி வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால், வங்கிகளில் வாடிக்கையாளர் முதலீட்டை பாதுகாக்க அரசு பாடுபட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

    வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி சாராத நிதிச்சேவை நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தை நிறுவனங்கள் திவால் ஆவதை தடுக்கும் நோக்கத்தில், ‘நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு மசோதா’ (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது.



    இந்த மசோதாவில் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வங்கி உள்ளிட்ட அமைப்புகள் திவால் ஆகும் நிலை ஏற்பட்டால், வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்து ஈடுகட்டப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று இதை திட்டவட்டமாக மறுத்தார். டெல்லியில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பான ‘எப்.ஐ.சி.சி.ஐ.’யின் 90-வது வருடாந்திர கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    வங்கிகளை ஸ்திரப்படுத்த மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. அதற்காக கொண்டுவரப்பட்ட எப்.ஆர்.டி.ஐ. மசோதா பற்றி வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களின் நலன்களையும், அவர்களது முதலீட்டு பணத்தையும் பாதுகாக்க மத்திய அரசு பாடுபட்டு கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு நேர்மாறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    வங்கிகளும், வாடிக்கையாளர்களும் பாதுகாக்கப்படும்போது, நாட்டு நலனும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, இதற்கு எதிரான வதந்திகளை முறியடிக்க எப்.ஐ.சி.சி.ஐ. பாடுபட வேண்டும்.

    எங்கள் அரசு, இளைஞர்களின் தேவையை மனதில் கொண்டு திட்டங்களை வகுக்கிறது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசோ, குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுக்குமாறு வங்கிகளை நிர்பந்தம் செய்தது. அதனால், அந்த கடன்கள், வாராக்கடன்களாகி விட்டன.

    முந்தைய ஆட்சியில் இருந்த பொருளாதார நிபுணர்கள், இந்த வாராக்கடன் சுமையை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த ஊழல், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த காமன்வெல்த் போட்டி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், 2ஜி ஊழல் ஆகியவற்றை விட மிகப்பெரிய ஊழல் ஆகும்.

    இந்த கடன்களை கொடுக்கும்போது, அவற்றின் விளைவுகள் பற்றி எப்.ஐ.சி.சி.ஐ. போன்ற அமைப்புகள் மத்திய அரசை எந்த வகையிலும் எச்சரிக்கவில்லை. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று தெரிந்தும் எல்லோரும் மவுனம் சாதித்தனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×