search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உள்பட 8 பெருநகரங்களில் பெண்கள் பாதுகாப்பு திட்டம்: மத்திய அரசு ஆய்வு
    X

    சென்னை உள்பட 8 பெருநகரங்களில் பெண்கள் பாதுகாப்பு திட்டம்: மத்திய அரசு ஆய்வு

    சென்னை உள்பட 8 பெருநகரங்களில் பெண்கள் பாதுகாப்புக்கான விரிவான திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
    புதுடெல்லி:

    சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத், லக்னோ ஆகிய 8 பெருநகரங்களில், ‘பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்’ என்ற விரிவான திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘நிர்பயா’ கற்பழிப்பு சம்பவத்தை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த வழிகாட்டு குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமை தாங்கினார்.

    மேற்கண்ட பெருநகரங்களின் போலீஸ் கமிஷனர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், 8 பெருநகரங்களிலும் பெண்கள் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. போலீஸ் துறையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல், போலீஸ் நிலையங்களில் பெண்களை பணியமர்த்துதல், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, பஸ்களில் போலீசாரை பயணிக்க செய்தல் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    பெண்களின் குறைகளை கேட்க நடமாடும் வேன்கள், புறநகர் ரெயில் நிலையங்களில் விளக்கு வசதி, கல்லூரிகளில் புகார் பெட்டி வைத்தல், பெண்களுக்கான பிரத்யேக உதவி மையம், தங்கும் இல்லங்கள் ஆகியவற்றை சில நகரங்கள் செயல்படுத்தி வருவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    பெண்கள் பாதுகாப்புக்காக சென்னை உள்ளிட்ட 8 பெருநகரங்களின் போலீஸ் நிர்வாகமும், மாநகராட்சி மன்றங்களும் ஒரு மாதத்துக்குள் ஒரு செயல் திட்டத்தை சமர்ப்பிப்பது என்றும், அதில் தேவையான திருத்தங்களை உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு குழு செய்வது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×