search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15-வது நிதி கமிஷன் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்
    X

    15-வது நிதி கமிஷன் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    மாநிலங்களுக்கு வரி வருவாயை பகிர்ந்து அளிப்பதற்காக, 15-வது நிதி கமிஷன் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    புதுடெல்லி:

    மாநிலங்களுக்கு வரி வருவாயை பகிர்ந்து அளிப்பதற்காக, 15-வது நிதி கமிஷன் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், 15-வது நிதி கமிஷன் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அரசியல் சட்ட அமைப்பான நிதி கமிஷன், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுவது வழக்கம். நாட்டின் வரி ஆதாரங்களை மதிப்பிடுவதுடன், மாநிலங்களுக்கு வரி வருவாயை பகிர்ந்து அளிப்பதற்கான செயல்திட்டத்தையும் இந்த கமிஷன் சிபாரிசு செய்யும். 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் இக்கமிஷன் தனது சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது.

    கமிஷன் உறுப்பினர்கள் யார் யார்?, கமிஷனின் ஆய்வு வரம்புகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் 24 ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு அளிப்பதற்கான யோசனைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    திவால் சட்டம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வந்தது. அதில் திருத்தங்கள் செய்வதற்காக அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    மத்திய அரசின் ‘பெண் குழந்தைகளை காப்போம்’ திட்டம், ஏற்கனவே நாடு முழுவதும் 161 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால், மேலும் 640 மாவட்டங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    அனைத்து வகையான பயங்கரவாதம் மற்றும் அமைப்புரீதியான குற்றங்களை ஒடுக்குவதில் ரஷியாவுடன் இணைந்து செயல்படுவதற்காக, ரஷியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய மந்திரிசபை அனுமதி அளித்தது. 27-ந் தேதி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷியாவுக்கு செல்லும்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். 
    Next Story
    ×