search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம்
    X

    50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம்

    50 ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருக்கும் வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதற்கான வரைவை உருவாக்க குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.
    புதுடெல்லி:

    50 ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருக்கும் வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதற்கான வரைவை உருவாக்க குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.

    இந்திய வருமான வரிச்சட்டம் 1961-ன் அடிப்படையில் நாட்டில் வருமான வரி வசூலிக்கப்படுகிறது. சிக்கலான வழிமுறைகளை கொண்ட இந்த சட்டத்துக்கு பதிலாக எளிமையான புதிய சட்டம் ஒன்றை இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

    டெல்லியில் கடந்த செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடந்த மூத்த வரி நிர்வாகிகளின் மாநாட்டின் போது இந்த சட்டத்தின் வழிமுறைகளை கணக்கில் கொண்ட பிரதமர் மோடி, வருமான வரிச்சட்டம் இயற்றி 50 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில் அதை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

    அதன் அடிப்படையில் இந்த சட்டத்தை மறுஆய்வு செய்யவும், நாட்டின் பொருளாதார தேவைக்கு ஏற்ப புதிய நேரடி சட்டத்துக்கான வரைவு ஒன்றை இயற்றவும் குழு ஒன்றை தற்போது மத்திய அரசு அமைத்து உள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் அர்பிந்த் மோடி தலைமையில் இந்த குழு அமைக்கப்படுகிறது.

    இந்த பணிக்குழுவில் பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி கணக்காளரும், அதிகாரி அல்லாத இயக்குனருமான கிரிஷ் அகுஜா, ஆமதாபாத்தை சேர்ந்த பயிற்சி வரி வக்கீல் முகேஷ் பட்டேல் உள்பட 5 உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர். மேலும் இந்த குழுவின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் செயல்படுவார்.

    பல்வேறு நாடுகளில் பரவலாய் காணப்படும் நேரடி வரி அமைப்பு முறை, சர்வதேச அளவிலான சிறப்பு நடைமுறைகள், நாட்டின் பொருளாதார தேவைகள் மற்றும் இது தொடர்பான பிற தகவல்களின் அடிப்படையில் புதிய சட்ட வரைவை உருவாக்க இந்த குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையை 6 மாதங்களுக்குள் அரசிடம் ஒப்படைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. வருமான வரி தொடர்பாக எளிமை மற்றும் தெளிவான சட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்த மத்திய அரசின் நோக்கத்தை இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துவதாக கூறியுள்ள பொருளாதார வல்லுனர்கள், இந்த நடைமுறையால் முதலீட்டாளர்களின் வியாபாரம் எளிதாகும் என்றும் தெரிவித்து உள்ளனர். 
    Next Story
    ×