search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெய்ப்பூர், கவுகாத்தி மாநகராட்சிகளில் தேசிய கீதம் - வந்தே மாதரம் கட்டாயம்: பா.ஜ.க. மேயர்கள் உத்தரவு
    X

    ஜெய்ப்பூர், கவுகாத்தி மாநகராட்சிகளில் தேசிய கீதம் - வந்தே மாதரம் கட்டாயம்: பா.ஜ.க. மேயர்கள் உத்தரவு

    ஜெய்ப்பூர், கவுகாத்தி மாநகராட்சிகளில் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் இசைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா மேயர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    நாடு முழுவதும் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் பிறகு பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் என உத்தரவிட்டு அமல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் மாநகராட்சியும் பா.ஜனதா வசம் உள்ளது. இந்த மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் காலை 9.50 மணிக்கு ஜனகன மன தேசிய கீதம் பாட வேண்டும், மாலை 5.55 மணிக்கு வந்தேமாதரம் பாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாநகராட்சி மேயர் அசோக் லகோதி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. இதையடுத்து நேற்று காலை 9.50 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் அவரவர் அறையில் இருந்தவாறு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

    மாலை 5-55 மணிக்கு வந்தே மாதரம் பாடி தேசப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.



    இதேபோல் பா.ஜனதா ஆளும் அசாம் மாநிலத்தில் கவுகாத்தி மாநகராட்சியிலும் காலையில் தேசிய கீதமும், மாலையில் வந்தே மாதரமும் பாட மேயர் மரிகென் சரானியா உத்தரவிட்டுள்ளார்.

    இதன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவார்கள். அதே போல் மாலை வரை பணியில் இருந்து செல்லும் நிலை ஏற்படும். இதனால் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று மேயர்கள் தெரிவித்தனர்.

    இதுபற்றி ஜெய்ப்பூர் மாநகராட்சி மூத்த காங்கிரஸ் கவுன்சிலர் உமர்தராஜ் கூறுகையில், நாட்டில் பல்வேறு இன மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கும், தேசிய கீதத்துக்கும் உரிய மரியாதை செலுத்தி வருகிறார்கள். ஆனால் இதையே மாநகராட்சிகள் உத்தரவிட்டு மலிவான விளம்பரம் தேடிக் கொள்கின்றன என்றார்.
    Next Story
    ×