search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரத்தில் பா.ஜனதா யாத்திரைக்கு பதிலடியாக மார்க்சிஸ்டு கம்யூ. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    திருவனந்தபுரத்தில் பா.ஜனதா யாத்திரைக்கு பதிலடியாக மார்க்சிஸ்டு கம்யூ. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாதயாத்திரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்தபிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி அரசியல் மோதல்கள் நடந்து வருகிறது.

    இந்த மோதல்கள் பல இடங்களில் கொலையிலும் முடிந்துவிடுகிறது. அரசியல் மோதல்களுக்கு இந்த கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக சமீபத்தில் கேரளாவில் பாரதிய ஜனதா சார்பில் மக்கள் பாதுகாப்பு யாத்திரை என்ற பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அந்த கட்சியின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் ஆளும் கட்சியின் மீது சரமாரியாக புகார்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பாதயாத்திரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கேரளாவில் பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றன. மாநில அரசு மீது குறைகூறி பாரதிய ஜனதா நடத்திய மக்கள் பாதுகாப்பு யாத்திரை தோல்வி அடைந்துவிட்டது. மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் மதவாத போக்குக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×