search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு மாற்றத்தால் வங்கிகளுக்கு ரூ.3800 கோடி இழப்பு: எஸ்.பி.ஐ. தகவல்
    X

    ரூபாய் நோட்டு மாற்றத்தால் வங்கிகளுக்கு ரூ.3800 கோடி இழப்பு: எஸ்.பி.ஐ. தகவல்

    உயர் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டு மாற்றத்திற்கு பிறகு கார்டு ‘ஸ்வைப்’ மெஷின் வாங்கியதால் வங்கிகளுக்கு ரூ.3800 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி உயர் மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

    அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான பணம் வங்கிகளின் இருப்புக்கு வந்தது.

    அதே நேரத்தில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குவதற்கான பாய்ண்ட் ஆப் செல் எனப்படும் ‘ஸ்வைப் பிங்’ எந்திரங்களை வாங்கும் படி வர்த்தகர்கள் வலியுறுத்தப்பட்டனர்.

    இதனால் சிறிய கடைகள் முதல் பெரிய விற்பனை நிலையங்கள் வரை ஸ்வைப் மெஷின் வாங்கப்பட்டு வருகின்றன.

    ஸ்வைப்பிங் எந்திரம் வாங்கியதில் தான் மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன்பு 15.1 லட்சமாக இந்த எந்திரங்கள் இருந்தன. கடந்த ஜூலை மாதம் இந்த ஸ்வைப் எந்திரங்கள் எண்ணிக்கை 28.4 லட்சமாக உயர்ந்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் எந்திரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கடந்த அக்டோபரில் ரூ.51 ஆயிரத்து 900 கோடியாக இருந்த பரிவர்த்தனை கடந்த ஜூலையில் ரூ.68 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்தது.

    இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் குறைய தொடங்கியுள்ளன. எதிர்பார்த்த அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை உயரவில்லை. இதனால் ஸ்வைப் எந்திரம் வழங்கிய செலவை ஈடுபட்ட முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.

    எந்திரங்கள் மூலம் வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றத்தில் ஆண்டுக்கு ரூ.4,700 கோடி இழப்பு ஏற்படுகிறது.

    ஒரே வங்கிக்குள் ஏற்படும் பண பரிமாற்றத்தில் கிடைக்கும் லாபம் ரூ.900 கோடியாக இருக்கும் எனவும் தெரிகிறது. எனவே ஒட்டு மொத்தமாக கணக்கிட்டு பார்க்கையில் ரூ.3,800 கோடி வரை இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×