search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதி அரேபியாவில் கொத்தடிமையாக சித்ரவதைபட்ட இந்தியப் பெண் வீடு திரும்பினார்
    X

    சவுதி அரேபியாவில் கொத்தடிமையாக சித்ரவதைபட்ட இந்தியப் பெண் வீடு திரும்பினார்

    நர்ஸ் வேலைக்காக சென்று சவுதி அரேபியாவில் 14 மாதங்கள் கொத்தடிமையாக சிக்கி சித்ரவதைபட்ட இந்தியப் பெண் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது வீட்டை வந்தடைந்தார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெசிந்தா மென்டோன்கா(42). மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கத்தார் நாட்டுக்கு நர்ஸ் வேலைக்காக முயற்சி செய்தார்.

    முதலில் துபாய்க்கும், அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட ஜெசிந்தாவை யான்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கொத்தடிமைப் போல் அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

    அங்கிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தப்பிவந்த ஜெசிந்தாவை கைது செய்த போலீசார் மீண்டும் அதே வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவரை விடுவிக்க வேண்டுமானால், 24 ஆயிரம் சவுதி ரியால்கள் (சுமார் ரூ.4 லட்சம்) தரவேண்டும் என்று அவரது ‘ஸ்பான்சர்’ நிபந்தனை விதித்ததாக தெரியவந்தது.

    இதுகுறித்து ட்விட்டரில் வெளியான தகவலைப் பார்த்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, ஜெசிந்தாவை மீட்க உதவும்படி சவுதியில் உள்ள இந்திய தூதர் அகமது ஜாவீத்துக்கு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார். மேலும், சவிதியில் உள்ள பிரபல தொண்டு நிறுவனத்தார் எடுத்த முயற்சியின் பலனாக 14 மாத கொத்தடிமை பிணையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெசிந்தா நேற்று முன்தினம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான முன்ட்ரங்காடி வந்து சேர்ந்தார்.

    உடுப்பியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெசிந்தா, தன்னை அடைத்து வைத்திருந்த நபரின் தாயார், மூன்று மனைவிகளின் வீட்டில் நாள் முழுக்க வேலை செய்ய வைத்தனர். அந்த வீட்டு குழந்தைகள் என்னை அடிமை என்று அழைத்தனர். ஒரு மிருகத்தைப்போல் என்னை சித்ரவதை செய்தனர்.

    அவர்களிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்து, மீண்டும் பிடிபட்ட பின்னர், அடி,உதை சித்ரவதை பலமடங்கு அதிகமானது. என் தலையை சுவரின்மீது மோதி கொடுமைப்படுத்தினர். தாகத்துக்கு குடிக்க தண்ணீர்கூட தராமல் தவிக்க விட்டனர் என தெரிவித்தார்.

    இனிமேல் எப்போதும் வளைகுடா நாடுகளுக்கு போக மாட்டேன் என்று கூறிய அவர், தன்னை இந்த நிலைக்கு உட்படுத்திய ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
    Next Story
    ×