search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகநூல், வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரி மனு: மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
    X

    முகநூல், வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரி மனு: மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

    முகநூல், வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரி ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு அக்டோபர் 17-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி ஐகோர்ட்டில் வி.டி.மூர்த்தி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்கள், இணையவழி தொலைபேசி சேவைகளை வழங்கி வருகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் சங்கேத குறியீடுகள், விசாரணை அமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாதவாறு உள்ளன. இவற்றை பயங்கரவாதிகள் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.

    எனவே, முகநூல், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தொலைபேசி அழைப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், அரசுக்கு இழப்பு ஏற்படும். இவற்றை ஒழுங்குபடுத்துவது பற்றி முடிவு எடுக்கும்வரை, மேற்கண்ட 2 வலைத்தளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கு மத்திய அரசு, அக்டோபர் 17-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×