search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘கார் வைத்திருப்பவர்கள் ஏழைகள் அல்ல’ பெட்ரோல் விலை உயர்வு பற்றிய மத்திய மந்திரியின் கருத்தால் சர்ச்சை
    X

    ‘கார் வைத்திருப்பவர்கள் ஏழைகள் அல்ல’ பெட்ரோல் விலை உயர்வு பற்றிய மத்திய மந்திரியின் கருத்தால் சர்ச்சை

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் விலை உயர்வே காணப்படுவதால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆங்காங்கே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களிலும் இறங்கி உள்ளன.

    ஆனால் இந்த விலை உயர்வை மத்திய சுற்றுலாத்துறை இணை (தனிப்பொறுப்பு) மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் நியாயப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல் வாங்குவது யார்? கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் வைத்திருப்பவர்கள்தானே? இந்த வாகனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினி கிடக்கவில்லை. அவர்கள் ஏழைகள் அல்ல. எரிபொருளுக்கான விலையை கொடுக்கும் அளவுக்கு வசதியுடன்தான் இருக்கின்றனர். எனவே வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தித்தான் ஆக வேண்டும்.

    நமது நாட்டில் ஏராளமான மக்கள் உணவு, உறைவிடம் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு கோடிக்கணக்கான நிதி தேவைப்படுகிறது. சமூகத்தில் பின்தங்கி இருக்கும் இந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளித்து வரும் மத்திய அரசு, அதற்கான நிதியை வரிகள் மூலமே வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறது.

    எனவே ஏழைகளின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை பெட்ரோலிய பொருட்களின் விலைக்கு நிர்ணயிக்கப்படும் வரிகள் மூலம்தான் அரசு பெருக்கி வருகிறது. அந்தவகையில் இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல் மற்றும் மது உள்ளிட்டவற்றை ஜி.எஸ்.டி.க்கு கீழே கொண்டு வரலாம். அதன் மூலம் இவற்றின் விலைகள் குறையும்.

    இவ்வாறு அல்போன்ஸ் கன்னன்தானம் கூறினார்.

    அவரது இந்த கருத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மத்திய மந்திரி சபையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட அல்போன்ஸ் கன்னன்தானம், இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது இது முதல் முறையல்ல. மாட்டிறைச்சி விவகாரத்திலும் அதிருப்தியளிக்கும் வகையிலான சில கருத்துகளை ஏற்கனவே கூறியிருந்தார்.

    அதாவது, ‘இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த நாட்டிலேயே மாட்டிறைச்சியை தின்று விட்டு வர வேண்டும்’ என அவர் கூறினார். இது அப்போது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×