search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அரசியல் வரலாற்றில் இடம்பிடித்த எஸ்.ஆர் பொம்மை வழக்கு: சுட்டிக்காட்டும் வகையில் என்ன சொல்கிறது?
    X

    இந்திய அரசியல் வரலாற்றில் இடம்பிடித்த எஸ்.ஆர் பொம்மை வழக்கு: சுட்டிக்காட்டும் வகையில் என்ன சொல்கிறது?

    மத்திய அரசானது மாநில அரசுகளை கலைக்க எடுக்கும் அஸ்திரமான 356-வது பிரிவுக்கு கடிவாளம் போடும் வகையில் அமைந்த எஸ்.ஆர் பொம்மை வழக்கின் மீதான தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
    மத்திய அரசானது மாநில அரசுகளை கலைக்க எடுக்கும் அஸ்திரமான 356-வது பிரிவுக்கு கடிவாளம் போடும் வகையில் அமைந்த எஸ்.ஆர் பொம்மை வழக்கின் மீதான தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

    தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு போதுமான பெரும்பாண்மை உள்ளதா? என்பதை நிரூபிக்க, சட்டசபையை கூட்டி நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அவர் முக்கியமாக எஸ்.ஆர் பொம்மை வழக்கை குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகம் மட்டுமல்ல உத்தரகாண்ட், அருணாச்சலப்பிரதேசம் என எந்த மாநில அரசுகளிலும் குழப்பமான சூழ்நிலை ஏற்படும் போது, மத்திய அரசானது அதை கலைக்கும் ஏற்பாட்டை முன்னெடுத்தால், அனைவராலும் சுட்டிக்காட்டப்படுவது எஸ்.ஆர் பொம்மை வழக்குதான். கிட்டத்தட்ட இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமாக குறிப்பிடப்படும் வழக்குகளில் எஸ்.ஆர் பொம்மை வழக்கு தனி இடம் பிடிக்கும். அப்படி என்னதான் இருக்கிறது இந்த வழக்கில்? பார்ப்போம்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ஆனது மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது, இப்பிரிவு அடிக்கடி பயன்படுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசியல் சாசனத்தின் சிற்பி என்றழைக்கப்படும் அம்பேத்கர் இந்த் பிரிவை செல்லாத ஒரு பிரிவாகதான் கருதினார். ஆனால், மத்திய அரசு இந்த பிரிவை தனது அஸ்திரமாக வைத்து பல மாநில அரசுகளை கலைக்கும் என அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

    மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் போதோ, அரசியல் சூல்நிலை மிக மோசமான நிலைக்கு செல்லும் போதோ அல்லது மாநில அரசினால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.

    பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தப்பட வேண்டிய இந்த 356-வது சட்டப்பிரிவு மத்திய அரசால் பல்வேறு அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது தான் வேதனையளிக்கும் விஷயம். இச்சட்டம், மத்திய அரசால், தனது அரசியல் எதிராளிகளைப் பழிவாங்கவும், சாதகமான அரசை மாநிலங்களில் அமைக்கவுமே பயன்படுத்தப்பட்டது.

    1959-ம் ஆண்டு முதல் முறையாக கேரளத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தைக் கலைக்க இப்பிரிவு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இதே பிரிவை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டது.

    1988-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ் ஆர் பொம்மை முதல்வராக பொறுப்பேற்றார். லோக் தளம் கட்சியும் அவருக்கு ஆதரவளித்ததை அடுத்து, இரு கட்சிகளும் இணைந்து ஜனதா தளமாக உருவெடுத்தது. ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு, மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

    சில நாட்கள் கழித்து கே.ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுனரை சந்தித்து, தனக்கு 19 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு, பொம்மை, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்து விட்டதால், அவரது ஆட்சியை கலைத்து விடலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால், கே.ஆர். மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள் தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர்.

    இதனையடுத்து, எஸ்.ஆர். பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால், அதனை கண்டுகொள்ளாமல், 1989 ஏப்ரல் மாதத்தில், பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    குடியரசுத்தலைவர் உத்தரவை எதிர்த்து பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதேபோல், நாகலாந்து, மேகாலயா மாநில அரசுகளும் 1988 மற்றும் 1991 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக கலைக்கப்பட்டது.

    1991-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் நிகழ்ந்த கலவரங்களுக்கு காரணமான, இந்துத்வ அமைப்புகளை தடை செய்யாததை காரணம் காட்டி பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசத்தின் அரசுகள் கலைக்கப்பட்டன.

    மேற்கண்ட அனைத்து மாநில அரசுகளும் கலைக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் எஸ்.ஆர் பொம்மையின் வழக்குடன் சேர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    1994-ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு இந்த வழக்கின் மீதான தீர்ப்பை வழங்கியது. கர்நாடக மாநிலத்தில் பொம்மை அரசை கலைத்தது செல்லாது என உத்தரவிட்ட நீதிபதிகள், தங்களது தீர்ப்பில் பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்களை அளித்திருந்தனர்.

    * மாநில அரசை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கு உள்பட்ட செயல். தவறான காரணங்களுக்காக மாநில அரசு கலைக்கப்பட்டிருந்தால் அதை செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு.

    * அரசியல் சட்ட பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரமானது நிபந்தனைகளுக்கும், மேற்பார்வைக்கும் உள்பட்டது.

    * மத்திய அமைச்சரவையானது, மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரைகள் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும், அப்பரிந்துரையானது எதன் அடிபப்டையில் வழங்கப்பட்டது என்பதை ஆராயும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு.

    * அரசியலமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது என்று கருதப்பட்டால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியில் அமர்த்தும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு.

    * இந்தியாவின் ஆணிவேராக உள்ள மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்திருந்தனர். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினால், 356-வது பிரிவினை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்படும் சம்பவங்கள் வெகுவாக குறைந்தது.

    சுதந்திரம் பெற்றது முதல் இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னர் வரை 356-வது பிரிவினை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருந்தாலும், இத்தீர்ப்பு வந்த பின்னர் இது வரையிலும் பத்துக்கும் குறைவான ஆட்சி கலைப்பு சம்பவங்களேநடைபெற்றுள்ளன.

    இத்தீர்ப்பானது, மாநில அரசுகளுக்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்தியதன் மூலம் இந்திய குடியரசில் கூட்டாட்சியை பலப்படுத்தியுள்ளது.
    Next Story
    ×