search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஸ்போர்ட் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்க இனி காவல்துறை விசாரணை தேவையில்லை - மத்திய அரசு
    X

    பாஸ்போர்ட் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்க இனி காவல்துறை விசாரணை தேவையில்லை - மத்திய அரசு

    பாஸ்போர்ட் விண்ணப்ப விவரங்களை காவல்துறை விசாரணையின்றி சரிபார்க்க இன்னும் ஒரு ஆண்டிற்குள் புதிய முறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் குற்றம் மற்றும் குற்றவியல் பிணையம் மற்றும் அமைப்புகள் (சி.சி.டி.என்.எஸ்.) திட்டத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் போர்ட்டலை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் நாட்டின் உள்ள அனைத்து குற்றவாளிகளின் விவரங்களையும் ஒருங்கிணைத்து, நாட்டிலுள்ள 15,398 காவல்நிலையங்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.

    இந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி, பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்பவர்களின் விவரங்களை காவலர்கள் உதவியின்றி எளிதான முறையில் கண்டறியும் முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் இந்த திட்டம் இன்னும் ஒரு ஆண்டிற்குள் அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

    இதுபற்றி ராஜீவ் மெஹ்ரிஷி நிருபர்களிடம் கூறியதாவது:–

    பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவரின் பின்னணி மற்றும் அவர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து கம்ப்யூட்டர் புள்ளி விவர தகவல்கள் மூலம் ஆய்வு செய்யும் முறை ஓராண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதற்காக பாஸ்போர்ட் வழங்கும் சேவையுடன், குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் ஒருங்கிணைப்பு திட்டம் மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இன்னும் ஓராண்டுக்குள் இணைக்கப்பட்டுவிடும்.

    இந்த எளிய முறையில் விண்ணப்பித்தவர் குறித்த பின்னணியை ஓரிரு நிமிடங்களில் கண்டறிய முடியும். இதற்காக நாடு முழுவதும் உள்ள 15,398 போலீஸ் நிலையங்களும் இதில் ஒருங்கிணைக்கப்படும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு போலீசார் நேரடியாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவரின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொள்வதற்கு அவசியம் இருக்காது 

    இவ்வாறு அவர் கூறினார். 

    ஹேக்கிங் எச்சரிக்கை தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ஹேக்கிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் உள்ளது, ஆனால் விவரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    தேசிய முக்கிய தகவல்கள் உட்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் இப்பணியில் ஈடுபட்டுகிறது. மக்களின் புகார்களை ஆன்லைன் மூலம் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்” என கூறினார்.
    Next Story
    ×