search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் சில்மிஷம்: உபேர் கால் டாக்சி டிரைவர் கைது
    X

    பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் சில்மிஷம்: உபேர் கால் டாக்சி டிரைவர் கைது

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட உபேர் கால் டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கழக்குட்டம் பகுதியில் வேலை பார்க்கும் பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் கடந்த 13-ம்தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக உபேர் கால் டாக்சியை புக் செய்தார்.

    சிறிது நேரத்தில் கால் டாக்சி வந்ததும் உஷா அதில் ஏறி காரின் முன்பக்கத்தில் அமர்ந்து புறப்பட்டார். டிரைவர் அவரிடம் பேசியபடி காரை ஓட்டினார்.

    ஆக்குளம் பகுதி அருகே வந்தபோது டிரைவர் தனது காலால் உஷாவின் காலில் உரசி சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உஷா காரை நிறுத்தும்படி சத்தம் போட்டார். டிரைவர் காரை நிறுத்தியதும் உஷா அதிலிருந்து கீழே இறங்கினார்.

    இதையடுத்து, கால் டாக்சி டிரைவர் தனது செய்கைக்கு உஷாவிடம் மன்னிப்பு கேட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின் உஷா வீடு திரும்பினார்.

    இதுதொடர்பாக உஷா கால் டாக்சி நிறுவனத்துக்கு இ-மெயிலில் புகார் அனுப்பினார். அவரது புகாருக்கு நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டு இ-மெயில் அனுப்பியதுடன், இந்த பிரச்னையை மீண்டும் கிளப்ப வேண்டாம் என கேட்டு கொண்டது.  

    மேலும், சாப்ட்வேர் என்ஜினீயர்களின் நலன்கள் குறித்து பிரதித்வாணி என்னும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பிடம் உஷா, தனக்கு நேர்ந்த விஷயத்தை கூறினார்.

    பிரதித்வாணி அமைப்பு அளித்த புகாரின் பேரில் கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து, கால் டாக்சி டிரைவரை நேற்று கைது செய்தனர்.

    இதுகுறித்து பிரதித்வாணி அமைப்பினர் கூறுகையில், ‘‘கால் டாக்சி டிரைவரை பழிவாங்க வேண்டும் என்பது உஷாவின் எண்ணமல்ல. அந்த டிரைவர் மீண்டும் இதுபோல் வேறு எந்த பெண்ணிடமும் நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த புகார் அளிக்கப்படுகிறது’’ என தெரிவித்தனர்.
    Next Story
    ×