search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களையே குடும்ப தலைவராக கருதி அரசு நலத்திட்ட உதவி: மத்திய அரசு புதிய திட்டம்
    X

    பெண்களையே குடும்ப தலைவராக கருதி அரசு நலத்திட்ட உதவி: மத்திய அரசு புதிய திட்டம்

    பெண்களை குடும்ப தலைவராக கருதி அரசு நலத்திட்ட உதவி வழங்கப்படும், பெண்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பெண்கள் முன்னேற்றத்துக்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ள போதிலும் பெண்கள் முன்னேற்றம் எதிர்பார்த்தபடி இல்லை. ஆண்களுக்கு சமமான நிலையில் இன்னும் பெண்கள் வரவில்லை.

    எனவே, பெண்களை மேலும் முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக 11 அம்ச திட்டம் ஒன்று மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதில் முக்கிய அம்சமாக பெண்களை குடும்ப தலைவியாக கருதி அவர்கள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்குவதும் ஒன்றாகும்.

    இதுவரை ஆண்களையே குடும்ப தலைவராக கருதி அவர்கள் மூலம்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி, பெண்கள் பெயரில் இந்த திட்டங்கள் வழங்கப்படும்.

    இனி உருவாக்கப்படும் புதிய திட்டங்களும் பெண்களை மையமாக வைத்தே உருவாக்கப்படும். பெண்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    பெண்களை முன்னேற்ற இன்னொரு திட்டமாக நகர உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களை நகர மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

    நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தலைவிகள் யார் என்பது பற்றிய பட்டியல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் மூலமாக தயார் செய்யப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு வீடுகள் உள்ளிட்டவை ஒதுக்கப்படும்.

    பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு பத்திர பதிவு கட்டணம் குறைக்கப்படும்.

    இது போல் பல்வேறு திட்டங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×