search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் 1½ வயது குழந்தை சித்ரவதை: காப்பக பெண் நிர்வாகி கைது
    X

    கேரளாவில் 1½ வயது குழந்தை சித்ரவதை: காப்பக பெண் நிர்வாகி கைது

    கேரளா காப்பகத்தில் 1½ வயது ஆண் குழந்தை ஒன்றை பெண் நிர்வாகி ஒருவர் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யும் காட்சி ‘வாட்ஸ்-அப்’பில் வீடியோவாக பரவியதன் மூலம் அவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி பாலதிவட்டம் பகுதியை சேர்ந்தவர் மினிமேத்யூ (வயது 49). இவர் அந்த பகுதியில் ‘களவீடு’ என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார்.

    இந்த காப்பகத்தில் 30-க்கு மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள், குழந்தையை பராமரிக்க முடியாதவர்கள் என்று பலரும் தங்கள் குழந்தைகளை காலையில் இங்கு விட்டு விட்டு மாலையில் அழைத்துச் செல்வார்கள். இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்த காப்பகத்தின் நிர்வாகி மினிமேத்யூ குழந்தைகளை பராமரிக்க சில பெண் ஊழியர்களையும் பணியில் வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த காப்பகத்தில் 1½ வயது ஆண் குழந்தை ஒன்றை பெண் நிர்வாகி மினிமேத்யூ கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யும் காட்சி ‘வாட்ஸ்-அப்’பில் வீடியோவாக பரவியது.

    இந்த வீடியோ காட்சியை அந்த குழந்தையின் பெற்றோரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் மினிமேத்யூவிடம் கேட்டபோது அவர் பெற்றோரை மிரட்டி உள்ளார். இதனால் தங்கள் குழந்தை சித்ரவதை செய்யப்பட்டது பற்றி அந்த தம்பதி களமச்சேரி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த காப்பகத்தில் முன்பு ஊழியராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் இந்த வீடியோவை ரகசியமாக படம்பிடித்து ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியிட்டது தெரியவந்தது.

    மேலும் அந்த பெண் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது காப்பகத்தில் உள்ள பல குழந்தைகளை மினிமேத்யூ இதுபோல சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×