search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவின் வியாபார தந்திரம் நீண்ட நாள் எடுபடாது: ஷீலா தீட்சித்
    X

    பா.ஜனதாவின் வியாபார தந்திரம் நீண்ட நாள் எடுபடாது: ஷீலா தீட்சித்

    பா.ஜனதாவின் வியாபார தந்திரம் நீண்ட நாள் எடுபடாது என்று டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில ஒருவருமான ஷீலா தீட்சித் கூறினார்.
    புதுடெல்லி:

    டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில ஒருவருமான ஷீலா தீட்சித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெல்லி உள்ளாட்சி தேர்தல் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வேட்பாளர் தேர்வு சரியாக இல்லை.



    பா.ஜனதாவிடம் 10 ஆண்டுகள் மாநகராட்சி இருந்தும் அவர்கள் சிறப்பாக செயல்படாதது குறித்து மக்களிடம் உரிய முறையில் காங்கிரஸ் எடுத்து சொல்லவில்லை.

    கடந்த சட்டசபை தேர்தலை விட காங்கிரசுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.

    இங்கு மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களிலும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி என்பது நீண்டு கொண்டே செல்லும் ஒன்றல்ல. பா.ஜனதா வெற்றிக்கும் ஒரு முற்றுப்புள்ளி வரும்.

    தற்போது பா.ஜனதா ஒரு பொருளை பிரபலப்படுத்துவது போல் வியாபார தந்திர பணிகளை கட்சிப்பணியாக செய்து கொண்டு இருக்கிறது. அந்த பணிகளால் அவர்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கலாம்.

    ஆனால், இது நீண்ட காலம் எடுபடாது. இன்றைய இந்தியாவை இந்த அளவுக்கு உருவாக்கி வைத்திருப்பதே காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்.

    பா.ஜனதாவின் மோசமான கொள்கைகள், அவற்றின் தவறான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் இன்னும் அதிகமாக எடுத்து சொல்ல வேண்டும். மக்களுடன் அதிக தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.



    இந்த இக்கட்டான நிலையில் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும். அவர் கட்சியின் துணை தலைவராக இருந்து நீண்ட கால அனுபவம் பெற்றுள்ளார். அவரிடம் கட்சியினரும் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அவர் புதிய வழிகாட்டுதலை வழங்கி புதிய பாதையில கட்சியை அழைத்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அவர், கட்சி தொண்டர்களை இன்னும் உற்சாகப்படுத்தி சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கிறேன்.

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இதுவரை நாடகம் ஆடி வந்ததை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.

    எனவேதான் அவர் தோல்வியை சந்தித்து இருக்கிறார். அவர் டெல்லியில் போதிய கவனம் செலுத்தாமல் மற்ற மாநிலங்களில் கவனம் செலுத்தினார். பழைய விதிமுறைகளை எல்லாம் மாற்றி குழப்பத்தை உருவாக்கினார். எனவேதான் அவரது கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×