search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யை அதிர வைத்த பெட்ரோல் பம்ப் மோசடி தொடர்பாக இதுவரை 23 பேர் கைது - தொடரும் ரெய்டு
    X

    உ.பி.யை அதிர வைத்த பெட்ரோல் பம்ப் மோசடி தொடர்பாக இதுவரை 23 பேர் கைது - தொடரும் ரெய்டு

    உத்தரப் பிரதேச மாநிலத்தை அதிரவைத்த நூதன முறை பெட்ரோல் பம்ப் மோசடி தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மாநிலம் முழுவதும் தொடர்ந்து ரெய்டு நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடும் மெஷினில் பழுது பார்க்கப்படுவதான பெயரில் அதனுள் எலெக்ட்ரீசியன் மூலம் சிறிய மைக்ரோ சிப்பை பொருத்துகின்றனர். இந்தச் சிப்பை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தலாம். போலீஸ் ரெய்டு வருவது தெரிந்தால் இருந்த இடத்திலிருந்து மைக்ரோ சிப்பை சுவிட்ச் ஆஃப் செய்து விடலாம்.

    இந்த சிப்கள் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் அவருக்கு கணக்கு மட்டும் சரியாகக் காட்டும், ஆனால் உள்ளுக்குள் 5%-10% பெட்ரோல் குறைவாகவே நிரப்பப்பட்டிருக்கும், எனவே வாடிக்கையாளர்களுக்குத் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதே தெரிய வாய்ப்பில்லை.

    இத்தகைய மோசடி சிப்கள் மூலம் பெட்ரோல் நிலையம் ஒன்று மாதத்திற்கு சராசரியாக ரூ.6 லட்சம் வரை சட்ட விரோதமாக சம்பாதிப்பதாகவும், மிகப்பெரிய பெட்ரோல் நிலையங்கள் இப்படி மோசடி செய்து மாதம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து, அம்மாநில காவல்துறை இம்மோசடி குறித்து விசாரிக்க தனிக்குழு அமைத்து உத்தரவிட்டது. அதன் பேரில், சிறப்புப் போலீஸ் படையினர் நேற்று முந்தினம் முதல் தலைநகர் லக்னோவில் ரெய்டு நடத்தி எலெக்ட்ரானிக் சிப் பொருத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய 13 பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள், மேனேஜர்கள், தொழில்நுட்பர்கள் என்று 23 பேரை  கைது செய்துள்ளனர்.

    மேலும், இம்மோசடி தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்களில் சிறப்பு போலீசார் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×