search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீண்ட தூர பஸ்கள் கட்டணம் கடும் உயர்வு: சென்னை-நெல்லைக்கு ரூ.255 முதல் ரூ.335 வரை அதிகரிப்பு
    X

    நீண்ட தூர பஸ்கள் கட்டணம் கடும் உயர்வு: சென்னை-நெல்லைக்கு ரூ.255 முதல் ரூ.335 வரை அதிகரிப்பு

    நீண்ட தூர பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.25 முதல் அதிகபட்சமாக ரூ. 150 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு கட்டணம் உயர்வு ரூ. 225 முதல் அதிகபட்சமாக ரூ. 335 வரை உயர்ந்துள்ளது. #busfareshike
    சென்னை:

    தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 22 ஆயிரத்து 509 அரசு பஸ்கள் இயங்குகின்றன.

    கடந்த 6 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படாததாலும், புதிய பஸ்கள் வாங்கப்படாததாலும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தினமும் சுமார் ரூ.10 கோடி இழப்பை அரசு போக்குவரத்து கழகங்கள் சந்தித்தன.

    பஸ்களுக்கான எரி பொருட்கள் விலையும் சமீப காலத்தில் கடுமையாக உயர்ந்து விட்டது. தொடர்ந்து சில ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதுபோல பேருந்துகள் பராமரிப்பு செலவும் கணிசமாக உயர்ந்தது.

    இதன் காரணமாக பஸ் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் சம்பளம் உரிய விகிதப்படி உயர்த்தப்பட முடியாமல் போனது. அது போல ஓய்வூதிய நிலுவை தொகையையும் குறிப்பிட்ட காலத்துக்குள் அரசால் வழங்க முடியவில்லை.

    சம்பளத்தை உயர்த்தக்கோரி சமீபத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 8 நாட்கள் நடந்த இந்த வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். நேற்று பஸ் கட்டண உயர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் அனைத்து கட்டணங்களும் இன்று முதல் உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பஸ் கட்டண உயர்வு இன்று காலை அமலுக்கு வந்தது.

    சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.1, விரைவு பேருந்துகளில் கட்டணம் ரூ.9 என சர்வீஸ்களுக்கு ஏற்றவாறு அதிகபட்சமாக ரூ.18 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சம் ரூ.9 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதுபோல நீண்ட தூர பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.25 முதல் அதிகபட்சமாக ரூ. 150 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களில் சராசரியாக 55 முதல் 66 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

    சென்னையில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் அரசு டீலக்ஸ் மற்றும் குளிர்சாதன வால்வோ பஸ்களில் கட்டண உயர்வு மிக அதிகமாக உள்ளது. உதாரணத்திற்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு குறைந்தபட்சம் கட்டணம் உயர்வு ரூ. 225 முதல் அதிகபட்சமாக ரூ. 335 வரை உயர்ந்துள்ளது.

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இதுவரை டீலக்ஸ் பஸ்களில் ரூ.490 கட்டணமாக இருந்தது. இன்று முதல் அது ரூ.778 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கூடுதலாக ரூ.288 கொடுக்க வேண்டியிருந்தது.

    குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ பஸ் களில் கட்டண உயர்வு மிக அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இதுவரை குளிர்சாதன பஸ்களில் ரூ.625 கட்டணமாக இருந்தது.

    தற்போது அது ரூ. 1037 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் செல்லும் பயணிகள் இன்று முதல் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.412 அதிகமாக கொடுக்க வேண்டும்.

    இது அரசு பேருந்துகளையே நம்பி இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த தூர வெளியூர் பஸ்களிலும் கட்டண உயர்வு 50 சதவீத அளவுக்கு உள்ளது.

    தமிழகம் முழுவதும் மாநகர, டவுன் பஸ்களிலும் கட்டண உயர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாநகர பேருந்துகளில் ஏறிய பெரும்பாலான பயணிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தனர்.

    சில இடங்களில் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. மாநகர குளிர்சாதன பஸ்களில் கட்டண உயர்வு மிக அதிகமாக இருந்ததால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    பஸ் கட்டண உயர்வுக்கு தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கட்டண உயர்வு மிக அதிகளவில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    எனவே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைத்து மீட்க வேண்டும் என்றால் பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியே இல்லை என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்தப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு மிக மிக குறைவே என்றும் எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. #busfareshike #tamilnews
    Next Story
    ×