search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: துணை ஜனாதிபதி பேச்சு
    X

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: துணை ஜனாதிபதி பேச்சு

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
    சென்னை:

    சென்னை கிளெனிக்கில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் முகமது ரெலாவும், அவரது குழுவினரும் 2009-ம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

    இதற்காக முகமது ரெலா மற்றும் குளோபல் ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் கே.ரவீந்திரநாத் ஆகியோருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    ஒரு காலகட்டத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டியதிருந்தது. ஆனால் இன்று ஆப்பிரிக்கா, இலங்கை, அரபு நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்தும் நோயாளிகள் சென்னைக்கு வருகின்றனர்.

    அமெரிக்கா இந்தியர்களை வெளியேற்ற நினைப்பதாக செய்திகள் வருகின்றன. அது உண்மை என்றால், அறிவுத் திறனில் இந்தியா பணக்கார நாடாகவும், அமெரிக்கா ஏழை நாடாகவும் தான் இருக்கும். ஏனென்றால், இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு அதிக அறிவு உண்டு. சுந்தர்பிச்சை, இந்திரா நூயி போன்றவர்கள் இதற்கு உதாரணம்.

    தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது ரெலாவும் இங்கிருந்து லண்டன் சென்று பின்னர் திரும்பி வந்துவிட்டார். டாக்டர் கே.ரவீந்திரநாத்தும் வெளிநாட்டில் இருந்து திரும்பி இங்கு சேவையாற்றி வருகிறார். யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறவில்லை. சென்று சம்பாதித்துவிட்டு தாய்நாடு திரும்பிவிடுங்கள்.

    உறுப்பு தானம் செய்பவர்களை நாம் வணங்க வேண்டும். இறந்த பின்னும் வாழ்பவர்கள் அவர்கள் தான். மருத்துவத் துறை எப்போதுமே சேவை செய்யும் துறையாக இருக்க வேண்டும். ‘கமிஷன்’ அதில் நுழையக்கூடாது.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதற்கான கட்டணமும் மற்ற நாடுகளைவிட குறைவாக உள்ளது. தற்போதுள்ள வாழ்க்கை முறையால் பல புதிய வியாதிகள் இளைஞர்களுக்கு வருகின்றன. இதற்கு நொறுக்குத் தீனியும் ஒரு காரணம்.

    தினமும் உடற்பயிற்சி அவசியம். பாரம்பரிய உணவுகளை சாப்பிடுங்கள். வாழ்க்கை முறையில் உடற்பயிற்சியை சேருங்கள். புதிய தொழில்நுட்பங்கள் நம்மை அசையவிடாமல் செய்துவிட்டன. அவற்றை தவிர்க்க முடியாது.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழக அரசு நிதி உதவிகளை செய்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். ஆனால் 1,500 அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறது. அதில் குளோபல் ஆஸ்பத்திரி மூன்றில் ஒரு பாகம் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.

    மருத்துவத்தில் எல்லா உதவிகளையும் அரசே செய்துவிட முடியாது. எனவே தனியார்களும் அதில் இணைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, “கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சவால் நிறைந்தது. இந்த சிகிச்சை மூலம் 278 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக 722 பேர் தானம் கொடுத்துள்ளனர். இறந்தவர்களின் உடலில் இருந்து 278 கல்லீரல் பெறப்பட்டுள்ளது” என்றார்.

    டாக்டர் முகமது ரெலா, “இதுவரை நான் 3,500-க்கும் மேற்பட்ட கல்லீரல் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாலும், தமிழகத்தில் மேற்கொண்ட ஆயிரம் அறுவை சிகிச்சைகளுக்காக பெருமை அடைகிறேன்” என்றார்.

    கல்லீரல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஏமன் நாட்டை சேர்ந்த அகமது ஹமீது, இலங்கையைச் சேர்ந்த 10 மாத குழந்தை தெனுகி உள்பட பலருக்கு பரிசு வழங்கப்பட்டது. ‘ஆயிரம் அறுவை சிகிச்சை நடந்துவந்த பாதை’ என்ற புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். #tamilnews

    Next Story
    ×