search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ தலைவராக தேர்வு: தமிழக விஞ்ஞானி சிவனுக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து
    X

    இஸ்ரோ தலைவராக தேர்வு: தமிழக விஞ்ஞானி சிவனுக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து

    ‘இஸ்ரோ’ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக விஞ்ஞானி சிவனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவனுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை அடுத்தக்கட்ட வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் அவருடைய முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    உலக அளவில் ஒரு தமிழரின் புகழ் பேசப்படும் அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவராக பொறுப்பு ஏற்றிருக்கும் விஞ்ஞானி சிவனுக்கு பாராட்டுகளையும், அவரது பணி சிறக்க அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் விண்வெளி ஆராய்ச்சி துறையில் தொடர்கின்ற தமிழர்களின் வரலாற்று சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே விஞ்ஞானி சிவனின் தேர்வை பார்க்கிறோம். இந்தியாவின் புகழை உலக அரங்கில் நிலைநாட்டிய பெருமைக்குரிய தமிழர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இஸ்ரோவின் தலைவராக விஞ்ஞானி சிவன் தேர்வு செய்யப்பட்டது, தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாகும். விஞ்ஞானி சிவனை வழிகாட்டியாக கொண்டு மாணவர்கள் செயல்பட்டால் இந்திய தேசத்திற்கு பெருமையாகும். இஸ்ரோ நிறுவனம் சிவன் தலைமையில் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு விஞ்ஞான உலகில் மிகப்பெரிய சாதனை புரிந்திட எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். #tamilnews
    Next Story
    ×