search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமானவர்களை மீட்க கோரி மேலும் 2 இடங்களில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    மாயமானவர்களை மீட்க கோரி மேலும் 2 இடங்களில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

    மாயமான மீனவர்களை மீட்க கோரி இரவிபுத்தன் துறை, மார்த்தாண்டன்துறை ஆகிய இடங்களில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மவுன ஊர்வலம் நடந்தது.
    நாகர்கோவில்:

    ஒக்கி புயல் தாக்கியதில் குமரி மாவட்ட மீனவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    பல மீனவர்களின் படகுகள் சூறாவளி காற்றிலும், ராட்சத அலைகளிலும் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டது. இதனால் படகு கவிழ்ந்து பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமான மீனவர்கள் மராட்டியம், குஜராத், லட்சத்தீவு போன்ற பகுதிகளில் கரை ஒதுங்கினர்.



    இதனால் மாயமான மீனவர்களின் கதி என்ன என்று உறுதியாக தெரியாததால் பல மீனவ குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கிறது. தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    மேலும் பல்வேறு இடங்களில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குழித்துறையில் ரெயில் மறியல், குளச்சல், மணவாளக் குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடந்தது. நேற்று முட்டம், ராஜாக்கமங்கலம் துறை என்று பல்வேறு மீனவர் கிராமங்களில் கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மவுன ஊர்வலம் நடந்தது. நேற்று பூத்துறையில் ஏராளமான மீனவர்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். இதில் திரளானோர் பங்கேற்றனர். 2 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.



    அதேபோல இரவிபுத்தன் துறை, தூத்தூர், வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டன் துறை, போன்ற இடங்களிலும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். சின்னத்துறை உள்பட பல்வேறு மீனவ கிராமங்களில் இன்றும் போராட்டம் நீடிக்கிறது.

    மேலும் இரவிபுத்தன் துறை, மார்த்தாண்டன்துறை ஆகிய இடங்களில் இன்று மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாயமான மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும், நிவாரண உதவிகளை அதிகரிக்க வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான மீனவர்கள் இந்த போராட்டங்களில் பங்கேற்றனர்.
    Next Story
    ×