search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரம்- சிறுசேரி 2-வது கட்ட வழிப்பாதையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில் ஓடும்
    X

    மாதவரம்- சிறுசேரி 2-வது கட்ட வழிப்பாதையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில் ஓடும்

    மாதவரம்-சிறுசேரி, 2-வது கட்ட வழிப்பாதையில் டிரைவர் இல்லாமல் ஓடும் தானியங்கி மெட்ரோ ரெயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரையில் உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேருபூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. இந்த வழித்தட பாதையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

    மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில் 2-வது கட்டமாக ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ.44 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    வருகிற 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. 108 கி.மீட்டர் தூரத்தில் 104 ரெயில் நிலையங்களை கொண்டதாக அமைக்கப்படுகிறது.

    2-வது கட்ட வழித்தட பாதையில் டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரெயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து நவீன கருவிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது. ரெயில் நிலையங்களில் தானாகவே வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.


    மத்திய நகர்புற வளர்ச்சி துறை கொள்கையின் படி வெளிநாடுகளை போன்று நவீன தரத்திலான கண்காணிப்பு கருவிகளுடன் தானியங்கி ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் இன்னும் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த மெட்ரோ ரெயில்திட்டம் மத்திய அரசு ஒப்புதலின் பேரில் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்ட பணியாக மாதவரம்-சிறுசேரி வழித்தடம் 108 கி.மீட்டரில் ரூ.44 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது. வெளிநாடுகளைப் போன்று நவீன தரத்தில் இந்த பாதை அமைக்கப்படும். நவீன கண்காணிப்பு கேமராக்கள் தொலைத்தொடர்பு வசதிகள் நிறைந்த இந்த வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரெயில் இயக்கப்படும். கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு இந்த போக்குவரத்து சேவை நடைபெறும். சென்னை மாநகர மெட்ரோ பயணிகளுக்கு புதுவித பயணமாகவும் இது வியப்பாகவும் அமையும்

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×