search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டல்களில் டீ-காபி விலையில் ரூ.4; பிரியாணி விலை ரூ.20 குறைந்தது
    X

    ஓட்டல்களில் டீ-காபி விலையில் ரூ.4; பிரியாணி விலை ரூ.20 குறைந்தது

    ஓட்டல்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், டீ- காபி விலையில் ரூ.4 குறைந்தது.
    சென்னை:

    மத்திய அரசு ஓட்டல்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் நிர்ணயித்தது. இதனால் ஏ.சி. மற்றும் நான் ஏ.சி. ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உதாரணமாக குடும்பத்துடன் சென்று ரூ.1000-க்கு சாப்பிட்டால் 18 சதவீத வரியையும் சேர்த்து ரூ.1180 செலுத்த வேண்டியிருந்தது.

    இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அடிக்கடி ஓட்டல்களுக்கு செல்வதை தவிர்க்க தொடங்கினார்கள். இதனால் முன்னணி ஓட்டல்கள் அனைத்திலும் விற்பனை வெகுவாக குறைந்தது.

    இதையடுத்து ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று ஓட்டல் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விவாதித்து 18 சதவீத வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.

    ஏ.சி. ஓட்டல்களுக்கு ரு.13 சதவீதமும், நான் ஏ.சி. ஓட்டல்களுக்கு 7 சதவீதமும் வரி குறைந்துள்ளது. வரி குறைப்பின் அடிப்படையில் உணவகங்களில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.


    ஓட்டல்களில் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் டீ, காபி ரூ.30க்கு விற்கப்பட்டது. தற்போது வரி குறைந்ததால் ரூ.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் பல உணவு வகைகளில் விலை குறைந்துள்ளது. பூரி செட் ரூ.59-ல் இருந்து ரூ.53 ஆக குறைந்தது. இதே போல் பொங்கல், தோசை எல்லாவற்றிலும் ரூ.6 குறைந்துள்ளது.

    பன்னீர் பட்டர் மசாலா ரூ.189-ல் இருந்து ரூ. 139 ஆகவும் குறைந்துள்ளது.

    சென்னையில் பிரியாணி சாப்பிட செல்பவர்களுக்கு தான் கொஞ்சம் அதிகமான சுமை இருந்தது. சுவையான பிரியாணி சாப்பிட ஓட்டல்களுக்கு சென்றால் ரூ.130 முதல் ரூ. 250 வரை விற்பனையாகிறது.

    இத்துடன் ஜி.எஸ்.டி. வரியும் சேரும். அதன்படி 200 ரூபாய் பிரியாணிக்கு ரூ.36 வரி கொடுக்க வேண்டும். இந்த வரி குறைப்பின் மூலம் ரூ. 26 குறைந்துள்ளது.

    இதுபற்றி சென்னை ராவுத்தர் பிரியாணி ஓட்டல் உரிமையாளர் எஸ்.சுலைமான் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு பிறகு வியாபாரம் குறைந்தது. வாராவாரம் குடும்பத்துடன் வரக்கூடியவர்கள் 2 வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை என வரத்தொடங்கினார்கள். 18 சதவீதம் வரியாக வசூலிக்கப்பட்டதால் விற்பனை சரிந்தது. குடும்பத்தோடு சாப்பிடும் போது ரூ.1000 பில் தொகைக்கு ரூ.180 வரியாக வசூலிக்கப்பட்டது.

    தற்போது 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. மகிழ்ச்சியளிக்கிறது. ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதால் இனி வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவார்கள். வியாபாரமும் நன்றாக நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். இதனுடைய பலன் அடுத்த மாதம்தான் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வரி குறைப்பு ஓட்டல் அதிபர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக இருந்தபோது விற்பனை கடுமையாக பாதித்தது. 30 சதவீதம் வரை விற்பனை குறைந்தது. சில ஓட்டல்களில் காலை டிபனையே நிறுத்தினார்கள். சுகாதாரமான, சுவையான உணவை சாப்பிட விரும்புபவர்கள் கூட கையேந்தி பவன் பக்கம் செல்ல தொடங்கினார்கள்.

    இனி 5 சதவீத வரி என்பது சுமையாக தெரியாது. 200 ரூபாய்க்கு சாப்பிட்டால் 10 ரூபாய்தான் வரி வசூலிக்கப்படும். எனவே இனி படிப்படியாக விற்பனை அதிகரிக்கும்.

    இந்த வரி குறைப்பால் உணவு பண்டங்களின் விலை குறையாது. முன்பு ஏ.சி. ஓட்டல்களில் வாட் மற்றும் விற்பனை வரி 8 சதவீதமாகவும், நான் ஏ.சி. ஓட்டல்களில் வெறும் 2 சதவீதமாகவும் இருந்தது.

    அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக உணவு பண்டங்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால் ஜி.எஸ்.டி. பாதிப்பால் ஏற்பட்ட வியாபார பாதிப்பு காரணமாக விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.

    இதற்கிடையில் இந்த வரி குறைப்பு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும் இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×