search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1430 கோடி வருமானத்துக்கு வரி ஏய்ப்பு: விவேக் - திவாகரனிடம் விசாரணை
    X

    ரூ.1430 கோடி வருமானத்துக்கு வரி ஏய்ப்பு: விவேக் - திவாகரனிடம் விசாரணை

    ரூ.1430 கோடி வருமானத்திற்கு வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக சசிகலாவின் சகோதரர் திவாகரன், விவேக், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
    சென்னை:

    சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக நடத்திய அதிரடி சோதனை நேற்றிரவு முடிவுக்கு வந்தது.

    மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா ஆகிய இருவரது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    ஆயிரக்கணக்கான அந்த ஆவணங்களை வருமான வரித்துறையின் ஒரு சிறப்புக் குழு பிரத்யேகமாக ஆய்வு செய்தது. அப்போது சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ரூ.1430 கோடி வருமானத்துக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இந்த ரூ.1430 கோடி பணம் ஏராளமான அசையா சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த சொத்துக்கள் தமிழகம் முழுவதும் சுமார் 200 இடங்களில் வாங்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அவை பற்றி விசாரணை நடத்த அவர்களது சொத்து பட்டியல்களை அதிகாரிகள் தனியாக தொகுத்து வருகிறார்கள். அந்த விசாரணை முடியும்போது சசிகலா குடும்பத்தினர் செய்துள்ள வரி ஏய்ப்பு மேலும் பல கோடி அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே 5 நாள் சோதனையில் ரொக்கமாக ரூ. 7 கோடியே 14 லட்சம் கிடைத்துள்ளது. இந்த ரூ.7 கோடி எப்படி வந்தது என்று வருமான வரித்துறையின் மற்றொரு குழு விசாரித்து வருகிறது. தங்க நகைகள் ரூ.5 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நகைகள் எப்போது, எப்படி வாங்கப்பட்டன என்ற விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    நகைகளில் தங்க நகைகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வைர நகைகளை இன்னும் மதிப்பீடு செய்யவில்லை. வைரங்களை ஆய்வு செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களை அழைத்து வந்து அவற்றை மதிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.



    சசிகலா குடும்பத்தினர் உறவினர்கள் பெயர்களில் நூற்றுக்கணக்கான வங்கி கணக்குகள் உள்ளன. அவற்றில் சில கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    இதுபற்றி ஆய்வு செய்த போது 16 வங்கி லாக்கர்கள் இருப்பதை கண்டுபிடித்து “சீல்” வைத்தனர். அந்த லாக்கர்களை இன்னும் ஓரிரு நாட்களில் திறந்து சோதனை நடத்த உள்ளனர். அந்த லாக்கர்களிலும் முக்கிய ஆவணங்கள், நகைகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அடுத்தக் கட்ட நடவடிக்கையை தொடங்கினார்கள். சொத்து ஆவணங்கள் யார்-யார் பெயர்களில் உள்ளதோ, அவர்களுக்கு “சம்மன்” அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தும் நடைமுறை தொடங்கியுள்ளது. அந்த வகையில் சுமார் 300 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பினாமிகளும் சிக்கியுள்ளனர்.

    அவர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த தேதிகளில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று விவேக், பூங்குன்றன், புகழேந்தி ஆகிய 3 பேர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்றனர்.



    அவர்கள் மூன்று பேரும் மீண்டும் விசாரணைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சசிகலா குடும்பத்து உறவினர்களும் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளனர்.

    இதன் மூலம் சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் மீதான பிடி இறுகுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்த தொடங்கியுள்ள இந்த விசாரணை முழுமையாக வீடியோவில் படம் பிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோ பதிவுகளை மீண்டும் பார்த்து, சசிகலா குடும்பத்தினர் சொல்லும் தகவல்கள் ஒன்றுக்கொன்று அனைத்தும் ஒத்துப்போகிறதா? அல்லது முரண்பாடாக உள்ளதா? என்று பார்க்க உள்ளனர்.

    வாக்குமூல தகவல்களில் முரண்பாடுகள் இருந்தால் அதற்கு ஏற்ப சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து வருமான வரித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் நடத்திய சோதனை 99 சதவீதம் முடிந்து விட்டது. இந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர் 251 இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதை கண்டு பிடித்துள்ளோம். பல சொத்துக்கள் பினாமிகள் பெயரில் உள்ளன.

    இது தவிர சசிகலா குடும்பத்தினர் 60 போலி நிறுவனங்களை நடத்தி வந்ததும் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்களில் நிறைய பேர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். மொத்தத்தில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 355 பேருக்கு இதில் தொடர்புள்ளது. அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம்.

    போலி நிறுவனங்கள் மற்றும் சொத்து ஆவணங்களில் பெரும்பாலானவை விவேக், அவர் சகோதரி கிருஷ்ணபிரியா பெயர்களில் உள்ளது. எனவே அவர்கள் இருவரை சுற்றியே அதிகபட்ச விசாரணை இருக்கும். இவர்கள் நிறுவனங்கள், சொத்துக்கள் பற்றி நாங்கள் தற்காலிக அறிக்கை ஒன்றை தயாரித்து டெல்லிக்கு அனுப்பி உள்ளோம்.

    டெல்லியில் இருந்து உத்தரவுகள் வந்ததும் அதற்கேற்ப எங்களது விசாரணைகள் மாறும். இதற்கிடையே ரூ.1430 கோடி வரி ஏய்ப்பு பற்றி விசாரிக்க ஒரு குழுவும், 16 லாக்கர்களை திறக்க மற்றொரு குழுவும் உருவாக்கி இருக்கிறோம். எனவே விரைவில் வங்கி லாக்கர்கள் திறக்கப்பட்டு சோதனை நடத்தப்படும்.

    அதுபோல எங்களிடம் சிக்கியுள்ள ஆவணங்களில் காணப்படும் சொத்துகளின் மதிப்பை கணக்கீடு செய்ய உள்ளோம். அது தொடர்பாக ஒருவர் கூட விடாமல் அனைவரிடமும் வாக்கு மூலம் பெறப்படும். வரும் நாட்களில் இந்த பணிகள் படிப்படியாக நடக்கும்.

    அதன் பிறகே பண பரி வர்த்தனைகளில் முறைகேடு நடந்ததா? என்பது தெரியும். தேவைப்பட்டால் அமலாக்கத் துறையும் அதுபற்றி விசாரிக்கும். எனவே வரி ஏய்ப்பு, சொத்து சேர்ப்பு, பண முதலீடு, பணப்பரிமாற்றம் உள்பட அனைத்தும் அந்தந்த சட்டப் பிரிவுகளில் நடைபெறும். முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானால் அந்தந்த சட்டப் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த நடவடிக்கைகளுக்கு சற்று கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    Next Story
    ×