search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா குடும்பத்தினரை சுற்றிவளைத்த வருமான வரித்துறை: கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையா?
    X

    சசிகலா குடும்பத்தினரை சுற்றிவளைத்த வருமான வரித்துறை: கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையா?

    தமிழகம் முழுவதும் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்ட சோதனை கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க.வையும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் பெறுவதற்கு, எடப்பாடி தலைமையிலான அணியும், தினகரன் தலைமையிலான அணியும் போட்டி போட்ட நிலையில், இறுதி தீர்ப்பை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இவ்வாறு அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.



    இதுதவிர போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகம், கோடநாடு எஸ்டேட், டிடிவி தினகரன் வீடு, சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு மற்றும் இவர்களின் உறவினர்கள் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வீடுகளையும் வருமான வரி அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை. வருமான வரித்துறையின் அதிகாரிகள் குழு, திட்டமிட்டு அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சமயத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    150-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பல ஆவணங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தினகரன் ஆதரவாளர்கள் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



    இது தினகரனை ஒடுக்குவதற்கான முயற்சி என்றும், மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்வதால் வருமான வரித்துறையை ஏவி விட்டிருப்பதாகவும்  குற்றம்சாட்டுகின்றனர்.

    ஆனால், கருப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 குழுமங்களின் போலி நிறுவனங்களை குறிவைத்து இந்த சோதனை நடைபெறுவதாகவும், அதில் 3 குழுமங்கள் சசிகலாவுக்கு சொந்தமானவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்துள்ள நிலையில், மத்திய அரசு கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×