search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் ஜி.எஸ்.டி.யால் பாதியாக குறைந்த வெள்ளி தொழில்: தொழிலாளர்கள் பாதிப்பு
    X

    சேலத்தில் ஜி.எஸ்.டி.யால் பாதியாக குறைந்த வெள்ளி தொழில்: தொழிலாளர்கள் பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியால் வெள்ளி கொலுசு தொழில் பாதியாக குறைந்ததால், லட்சக்கணக்காண தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
    சேலம்:

    மாம்பழத்திற்கு பெயர் பெற்ற சேலம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்குவது வெள்ளி கொலுசு தயாரிப்பு. இங்கு தயாரிக்கப்படும் கொலுசுகள் கலை நயத்துடன் தரமாக இருக்கும் என்பதால் நாடு முழுவதும் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

    இதில் குறிப்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, பொன்னம்மாபேட்டை, குகை, இளம்பிள்ளை உள்பட 60 கிராம பகுதிகளில் கொலுசு உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வந்தது.

    இந்த தொழிலை நம்பி சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமாக தொழிலாளர்கள் இருந்தனர். இங்கு தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யில் வெள்ளி கொலுசு தயாரிப்புக்கு கிலோவுக்கு 400 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் வெள்ளி கொலுசுகள் விலை உயர்ந்ததால் விற்பனை மிகவும் குறைந்தது. வெள்ளி கொலுசு தயாரிப்பு தொழில் முற்றிலும் முடங்கியதால் பெரும்பாலான வெள்ளி கொலுசு பட்டறைகள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேறு வேலையை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் சேலம் மாவட்டத்தில் கொலுசு உற்பத்தி நடைபெற்றதற்கான அடையாளமே இல்லாத நிலை ஏற்பபட்டுள்ளது

    இது குறித்து வெள்ளி கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-

    நாட்டிலேயே சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த கொலுசுகள் கலை நயத்துடன் செய்யப்படுவதால் தனி இதற்கு சிறப்பு உண்டு. இதனால் நாடு முழுவதும் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    முன்பு வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் தொழிலுக்கு வரி இல்லாமல் இருந்தது. ஆனால் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.400 வரை வரி கட்ட வேண்டியுள்ளது. இதனால் கொலுசு விலை உயர்ந்துள்ளது.

    மேலும் செல்லாத நோட்டு அறிவிப்பால் வியாபாரம் குறைந்து வியாபாரிகள் கையில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் இருந்து கொலுசு வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 600 முதல் 700 டன் வரை வெள்ளி கொலுசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பாதியாக குறைந்துள்ளது. இதனால் இதில் வேலை செய்த 3 லட்சம் தொழிலாளர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து வேறு வேலை தேடி அலைகிறார்கள்.

    மேலும் கொலுசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 200 முதல் 300 வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. கூலி வேலைக்கு செல்வோருக்கு கூட 500 முதல் 600 ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதால் அந்த தொழிலுக்கு பலர் சென்றுவிட்டனர்.

    இதே நிலை நீடித்தால் சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு தயாரிப்பு இல்லாமல் போய்விடும் என்பதால் மத்திய அரசு வெள்ளி கொலுசு தயாரிப்புக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விதி விலக்கு அளித்து அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×