search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் தடுப்பணைகள் இல்லாததால் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் கடலில் கலக்கிறது: விவசாயிகள் வேதனை
    X

    கடலூரில் தடுப்பணைகள் இல்லாததால் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் கடலில் கலக்கிறது: விவசாயிகள் வேதனை

    கடலூரில் தடுப்பணைகள் இல்லாததால் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    கடலூர்:

    கர்நாடகத்திலும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி அணைகள் நிரம்பி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணை வந்தடைந்தது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் சாத்தனூர் அணையிலிருந்து 9,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் விழுப்புரம் மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு, திருக்கோவிலூர் வழியாக விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்கட்டுக்கு வந்தடைந்தது.

    அங்கிருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல் பட்டாம்பாக்கம், மருதாடு, உண்ணாமலை செட்டிச்சாவடி, ஆல்பேட்டை பகுதி வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வெள்ளப் பெருக்கினால் கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே கொம்மந்தான்மேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. அங்கு தண்ணீர் அதிகரித்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    கடலூருக்கு வந்த தென்பெண்ணையாற்று நீர் இறுதியில் தாழங்குடா கடலில் கலந்தது. கடந்த ஒராண்டு காலமாக வறண்டு கிடந்த தென் பெண்ணையாற்றில் தற்போது வெள்ளம் இருபுறமும் பெருக்கெடுத்து ஒடியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்தனர்.

    கடலூரில் தடுப்பணைகள் ஏதும் இல்லாததால் தென்பெண்ணையாற்று நீர் வீணாக கடலில் கலந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, கடந்து செல்வதோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×