search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: நாராயணசாமி தொகுதியில் கவர்னர் ஆய்வு
    X

    டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: நாராயணசாமி தொகுதியில் கவர்னர் ஆய்வு

    புதுவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து சபாநாயகர், முதல்-அமைச்சர் தொகுதிகளுக்கே வந்து கவர்னர் ஆய்வு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டி இருந்தார்.

    அதோடு கவர்னரே நேரடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

    சுகாதாரத்துறையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது? என்பதையும் மருத்துவ கண்காணிப்பாளர் மோகன் குமாரிடம் கேட்டறிந்தார். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்கும்படி தானே நேரில் சென்று பொதுமக்களிடம் அறிவுறுத்த போவதாகவும் கூறியிருந்தார்.

    இதையடுத்து புல்வார் பகுதிகளில் காரில் சென்று பொதுமக்களை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணா நகர் பகுதிக்கு கவர்னர் கிரண்பேடி சென்றார். அங்கு வீதி, வீதியாக சென்று பார்வையிட்டார். தேங்கியிருந்த குப்பைகளையும், தேங்கிய தண்ணீரையும் அகற்ற உத்தரவிட்டார்.

    அங்கிருந்த பொது மக்களிடம் காலிமனைகளில் குப்பைகளை போடாதீர்கள். தண்ணீரை தேங்க செய்யாதீர்கள். வீட்டிற்கு அருகில் குப்பைகளை கொட்டாதீர்கள் என அறிவுறுத்தினார்.

    அங்கிருந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்புக்கு கவர்னர் கிரண்பேடி வந்தார். அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து பெரியார் நகர் பகுதிகளில் நடந்து சென்றார்.

    அங்கு டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்தார். அவர்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார்.

    பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு 700 சதவீதம் அதிகரித்துள்ளதா? 30 சதவீதம் அதிகரித்துள்ளதா? என்பது கேள்வியல்ல. டெங்கு ஜீரோ சதவீதமாக குறைய வேண்டும் என்பதுதான் ஒரே எண்ணமாக இருக்க வேண்டும். இதற்காக அரசு துறைகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    தற்போது நானும், அரசு அதிகாரிகள் எல்லோரும் இங்கு வந்துள்ளோம். நாங்கள்தான் அரசு. உங்களிடம் குறைகள், புகார்கள் இருந்தால் எங்கள் குழுவை தொடர்பு கொண்டு பேசுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறோம். காலி மனைகளில் தண்ணீர் தேங்கவிடக்கூடாது, குப்பைகளை கொட்டக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

    7 நாட்களில் காலிமனைகளில் குப்பை இருந்தால், தண்ணீர் தேங்கியிருந்தால் அதை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் ரூ.100 முதல் ரூ.ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். நான் மீண்டும் இப்பகுதிக்கு வந்து பார்வையிடுவேன்.

    இவ்வாறு கவர்னர் கூறினார்.

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் இடையே ஏற்கனவே கடுமையான மோதல் இருந்து வருகிறது. தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிக்காமல் தொகுதிக்கு வந்தால் கவர்னரை தடுத்து நிறுத்துங்கள் என முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சபாநாயகர், முதல்-அமைச்சர் தொகுதிகளுக்கே வந்து கவர்னர் ஆய்வு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×