search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் விடுமுறை எதிரொலி: சுற்றுலா பயணிகள் வருகையால் புதுவை குலுங்கியது
    X

    தொடர் விடுமுறை எதிரொலி: சுற்றுலா பயணிகள் வருகையால் புதுவை குலுங்கியது

    தொடர் விடுமுறை காரணமாக புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    கடந்த மாதம் 29-ந் தேதி முதல் இன்று (திங்கட்கிழமை) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுவையில் வழக்கமாக வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    வார விடுமுறையோடு சேர்ந்து கூடுதலாக விடுமுறை கிடைத்ததால் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு நகரின் ஓட்டல், விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் நகரை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் ஓட்டல்களில் தங்கினர்.

    புறநகர் பகுதிகளிலும் ஒரு கட்டத்தில் அறைகள் கிடைக்காததால் புதுவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரின் பிரதான வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மி‌ஷன் வீதி, கடற்கரை சாலை பகுதிகளில் வாகனங்கள் ஊர்வலம் போல் சென்றன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.

    புதுவையில் உள்ள சுற்றுலா தளங்களில் நோணாங்குப்பம் பாரடைஸ் கடற்கரை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த பகுதியாகும். இங்கு படகு சவாரி செய்து பாரடைஸ் பீச்சுக்கு செல்ல சுற்று பயணிகள் குவிந்தனர்.

    நீண்ட வரிசையில் மணிக் கணக்கில் நின்று பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சென்றனர். அங்கு கடலில் குளித்து மகிழ்ந்தனர். படகு சவாரி மூலம் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.4 லட்சம் வசூலானது. அதோடு கடந்த 3 நாட்களில் ரூ.12 லட்சம் வசூலாகி உள்ளது.

    அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், ஆரோவில், ஊசுட்டேரி, வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் என பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் காணமுடிந்தது.

    இன்றும் (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
    Next Story
    ×