search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்வள அட்டையை பெற்று விவசாயிகள் பயன் அடைய வேண்டும்: கலெக்டர் தகவல்
    X

    மண்வள அட்டையை பெற்று விவசாயிகள் பயன் அடைய வேண்டும்: கலெக்டர் தகவல்

    திருவாரூர் மாவட்டத்தில் மண்வள அட்டையை பெற்று விவசாயிகள் பயன் அடைய வேண்டும் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மண் வளமே விவசாயிகளின் நலம் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்து மண் வளத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. மண் வளம் என்பது பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகள், நன்மை தரும் நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சரியான அளவில் உள்ள மண்ணில் மட்டும் சத்து இருப்பதால் விளையும் பயிர்களின் உற்பத்தி திறன் அதிகரித்து விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கின்றது.

    உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தீவிர பயிர் சாகுபடியில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டு மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் மண் உயிரற்றதாகின்றது. இத்தகைய மண்ணில் விளையும் பயிர்களின் வளர்ச்சி குன்றி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது. எனவே விளை நிலங்களின் மண் வள நிலையினை அறிந்து, அதற்கேற்ப பயிருக்கேற்ற சமச்சீர் உரங்களை இடுவதும் அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதால் மட்டுமே இழந்த மண் வளத்தை மீட்கவும் பாதுகாக்கவும் முடியும்.

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மண் வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரச் செலவை குறைத்து விளை நிலங்களின் மண் வளத்தை பேணுவதில் மண் வள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே விவசாயிகள் மண் வள அட்டையினை பெற்று பயன் அடைய வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×