search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் பேச்சால் தொண்டர்கள் குழப்பம்
    X

    சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் பேச்சால் தொண்டர்கள் குழப்பம்

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாறி, மாறி பேசுவது கட்சி நிர்வாகிகளிடையே தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் ஆட்சி பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக கூறுபவர்.

    அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்த போது பல்வேறு கருத்துகளை கூறினார். குறிப்பாக தொகுதிக்குட்பட்ட பகுதியில் முறைகேடாக இயங்கி வந்த கல்குவாரி மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த பின்னர் ஆட்சி சரியாக செல்கிறது என்றார். அதன்பின்னர் ஒவ்வொரு முறை பேட்டி அளிக்கும் போதும் மாறி, மாறி பல்வேறு கருத்துகளை கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட போது தினகரனுக்கு ஆதரவாக பேசினார். திடீரென ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்த பின்னர் கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை கூறினார்.

    இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு காரணமே ஓ.பன்னீர்செல்வம் தான். அவரை கட்சியில் சேர்க்க எந்த எம்.எல்.ஏ.க்களின் கருத்தையும் கேட்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் நம்ப முடியவில்லை. யார் நல்லவர்கள் என்றே தெரியவில்லை. தற்போதுள்ள ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போது தான் யார் நல்லவர்கள் என்று தெரியும் என அதிரடியாக கூறினார்.

    ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே ஆட்சியை கலைக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. எனவே அவர் தினகரன் அணியில் இருக்கிறாரோ? என நிர்வாகிகள் நினைத்தனர். திடீரென தினகரனின் நடவடிக்கை தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது. அவர் மீது நம்பிக்கை போய் விட்டது என கூறி பல்டி அடித்தார்.

    இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நிருபர்களை சந்தித்த அவர் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் எனக்கு வருத்தம் அளிக்கிறது. சபாநாயகரின் இந்த நடவடிக்கை சரியில்லை. இது கட்சிக்கு பலவீனமே. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறுவது சிரமம் என கூறினார்.

    ஆனால் அன்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை செல்வதற்காக கோவை வந்தபோது கருமத்தம்பட்டியில் வைத்து அவர் தலைமையில் வரவேற்பு கொடுத்தார். கனகராஜ் எம்.எல்.ஏ. இப்படி மாறி, மாறி பேசுவது கட்சி நிர்வாகிகளிடையே தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பிடிகொடுக்காமல் தவிர்த்து வருகிறார்.
    Next Story
    ×