search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: 26 மாணவர்கள் சிறையில் அடைப்பு
    X

    நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: 26 மாணவர்கள் சிறையில் அடைப்பு

    நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்களில் 26 பேர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா, டாக்டராக முடியாத ஏக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும், அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகிறார்கள். எஸ்.எப்.ஐ. என்று அழைக்கப்படும் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது கல்லூரிக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் திரண்டது போல நீட் பிரச்சினைக்காக மீண்டும் மாணவர்கள் கூடி விடக் கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்து மாலையில் விடுவித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

    அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதில் தவறு இல்லை. அதே நேரத்தில் சட்டம்- ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டது.


    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் மாணவர்களின் போராட்டம் விலக்கி கொள்ளப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மாணவர்களோ, அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

    சென்னையில் நேற்று 3 இடங்களில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி பின்புறம் உள்ள சாலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    இந்த போராட்டத்தின் பின்னணியில் எஸ்.எப்.ஐ. மாணவர் சங்கம் செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவிகளை போராட்டத்துக்கு தூண்டியதாக அந்த அமைப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பூர் மேம்பாலம் அருகில் மாநகராட்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 100 பேர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தையும் மாணவர் சங்கத்தினரே தூண்டி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே பெசன்ட் நகரில் ஆர்ச் அருகில் கல்லூரி மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குருநானக் கல்லூரி மாணவர்களுடன் மேலும் சில கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் திரண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 6 பேர் 17 வயதுக்குட்பட்டவர்கள். இதில் மாணவி ஒருவரும் இருந்தார். இவர்கள் மட்டும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இவர்கள் தவிர 13 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களோடு சேர்த்து நுங்கம்பாக்கம் மற்றும் செம்பியத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் அமைப்பினர் 13 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் கைது செய்யப்பட்ட 26 பேரும் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

    மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலை பீடத்தில் ஏறி மாணவ - மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 81 மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்தனர். 76 பேர் திண்டுக்கல் சிறையிலும், 5 மாணவிகள் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இதன் மூலம் தமிழகத்தில் நீடித்து வரும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை தடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப போலீசாரும் சட்டம்-ஒழுங்கை காக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தலாம். பொது மக்களை பாதிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் மறியல் உள்ளிட்ட திடீர் போராட்டங்களில் ஈடுபடுவோரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


    Next Story
    ×