search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார்
    X

    முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார்

    தி.மு.க. தலைவர் கருணாநிதியை வைகோ இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7 மாதங்களாக ஓய்வில் உள்ளார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலமாகவே உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

    இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-

    53 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவராக இருந்தபோது கலைஞரை முதல்முறையாக சந்தித்தேன். 23 ஆண்டுகள் அவருடன் நிழலாக இருந்தேன். என் மனதின் அடி ஆழத்தில் கலைஞர் இருக்கிறார். என்னை வளர்த்தவர் அவர். நெருக்கடி நிலை காலத்தின்போது எனக்கு ஆதரவு தந்தவர். அந்த நன்றியை நான் மறக்கவில்லை.

    கடந்த 2 மாத காலமாக ஒவ்வொரு நாளும் என் கனவில் கலைஞர் வந்தார். இன்று அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். கலைஞர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். என்னிடம் அவர் பேச முற்பட்டார். உணவுக் குழாய் பொருத்தப்பட்டிருந்ததால் பேச முடியவில்லை. நான் போய்விட்டு அப்புறம் வருவதாக கூறியதும், என்னைப் பார்த்து சிரித்தார். அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

    அவர் விரைவில் குணமடைந்து உரையாற்றுவார். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். நானும் வருவதாக கூறினேன். அப்போது, கலைஞரின் உதடுகளில் புன்முறுவலைப் பார்க்க முடிந்தது. இயற்கை அன்னையின் ஆசியுடன் கலைஞர் முழுமையாக நலம் பெற்று மீண்டும் தனது கம்பீர குரலில் உரையாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். முரசொலி விழாவில் பங்கேற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×