search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திடீர் தியானம்
    X

    ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திடீர் தியானம்

    சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திடீரென தியானத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இன்று இணைந்தன. இதனையடுத்து அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர், நிதி அமைச்சர் பதவியும், பாண்டியராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறையும் வழங்கப்பட்டது. 

    மாலை 4.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியராஜன் இருவருக்கும் தமிழக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் இருவரும் தலைமைச் செயலகத்தில் வந்து பொறுப்பேற்று கொண்டனர்.

    ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்த அதேசமயத்தில் சென்னை அடையாரில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை பல மணி நேரம் நீடித்தது.

    தினகரனுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றனர். ஜெயலலிதா நினைவிடத்திற்கு சுமார் 18 எம்.எல்.ஏ.க்கள் வருகை புரிந்தனர். அவர்கள் கூட்டாக தியானத்தில் ஈடுபட்டனர்.

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான “செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன், முத்தையா, ஏழுமலை, பார்த்திபன், தஞ்சை ரங்கசாமி, கென்னடி மாரியப்பன், முருகன், பாலசுப்ரமணியன், ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன், சாக்கூர் சப்பரமணியன், ஜக்கையன், தங்கதுரை, கதிர்காமு” உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டுள்ளனர்.

    சில நிமிடங்கள் வரை இந்த தியானம் நீடித்தது. பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினகரனும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. தினகரன் தனது டுவிட்டர் தளத்தில், “காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனை படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறேன். வரும் 23-ம் தேதி உங்களை சந்திக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
    Next Story
    ×