search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் - கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
    X

    விழுப்புரம் - கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    விழுப்புரம்:

    ழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இடையிடையே மழையும் பெய்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை லேசான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 5.30 மணிக்கு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் இந்த மழை நீடித்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.

    கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பாலத்தின் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் காணை, பெரும்பாக்கம், திருவாம்மாத்தூர் உள்பட பல பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காலையில் வெயில் வெளுத்து வாங்குவதும், மாலையில் மழை கொட்டி தீர்ப்பதுமாக கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று இடி-மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நெய்வேலியில் நேற்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வந்த மழை மாலையில் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.

    மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்பட பல பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
    Next Story
    ×