search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு அவசர சட்டம்: பிளஸ்-2 மாணவர்கள் மகிழ்ச்சி - நீட் மாணவர்கள் அதிர்ச்சி
    X

    தமிழக அரசு அவசர சட்டம்: பிளஸ்-2 மாணவர்கள் மகிழ்ச்சி - நீட் மாணவர்கள் அதிர்ச்சி

    மருத்துவ சேர்க்கை விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்தால், பிளஸ்-2 மாணவர்கள் மகிழ்ச்சியிலும், நீட் தேர்வு மூலம் தேர்வான மாணவர்கள் அதிர்ச்சியிலும் இருக்கின்றனர்.
    சென்னை:

    நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. அவசர சட்டம் கொண்டு வந்தால் இந்த ஆண்டு விலக்கு அளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளது.

    இதனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை போல் பிளஸ்-2 மார்க் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன் காரணமாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பலர் சீட்டுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக சி.பி.எஸ்.இ. மூலம் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மார்க் எடுத்து மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். அவர்கள் இந்த இடத்தை இழக்க வேண்டி உள்ளது.

    அதே நேரத்தில் பிளஸ்-2 தேர்வில் அதிக மார்க் எடுத்தும் நீட் தேர்வில் போதிய மார்க் இல்லாததால் பலருக்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை.

    இப்போது அவசர சட்டம் வருவதால் அவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    அதே நேரத்தில் நீட் தேர்வு அடிப்படையில் இடம் கிடைத்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆர்த்தி என்ற மாணவிக்கு பிளஸ்-2 தேர்வு அடிப்படையில் கட்-ஆப் மார்க் 199.75 உள்ளது. ஆனால், அவர் நீட் தேர்வில் 200 மார்க்தான் எடுத்திருந்தார்.

    இதனால் அவருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. கால்நடை மருத்துவ கல்லூரியில் தான் இடம் கிடைத்திருந்தது. அவர் மிகுந்த சோகத்தில் இருந்தார்.

    இப்போது பிளஸ்-2 மார்க் அடிப்படையில் இடம் கிடைப்பதால் அவருக்கு சென்னை மருத்துவ கல்லூரியிலேயே இடம் கிடைக்கும். அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    இது பற்றி அவர் கூறும்போது, எங்கள் பள்ளியில் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றுகூட சொல்லித்தரவில்லை. மேலும் பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் எனக்கு உடல்நிலை சரியில்லை.

    இதனால் நீட் தேர்வை சரியாக எழுதவில்லை. உயிரியலில் நெகட்டிவ் மார்க் காரணமாக நான் அதிக மார்க்கை இழந்து விட்டேன். இதனால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை இருந்தது. இப்போது இடம் கிடைக்கும் என்பதால் மிகுந்த சந்தோ‌ஷத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

    நந்தகுமார் என்பவருடைய மகள் பிளஸ்-2 தேர்வில் 1105 மார்க் எடுத்திருந்தார். ஆனால், நீட் தேர்வில் 382 மார்க் அவருக்கு கிடைத்து இருந்தது. இதனால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.

    இப்போது பிளஸ்-2 மார்க் அடிப்படையில் இடம் அளிக்கப்படுவதால் இந்த மாணவிக்கு கிடைத்த மருத்துவ இடம் கைவிட்டு செல்ல உள்ளது.

    இது சம்பந்தமாக அவரது தந்தை கூறும்போது, நீட் தேர்வுக்கு கடுமையாக உழைத்து எனது மகள் அதிக மார்க் எடுத்தாள். ஆனால், இப்போது எல்லாம் பறிபோகும் நிலையில் உள்ளது. இதனால் அவளும், நாங்களும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம் என்று கூறினார்.

    மத்திய ஐ.சி.எஸ்.இ. பள்ளியில் படித்த ஒரு மாணவர் நீட் தேர்வில் 477 மார்க் எடுத்திருந்தார். இதனால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. இப்போது அவரது இடமும் பறிபோகிறது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தேனியை சேர்ந்த ஹரினி என்ற மாணவி பிளஸ்-2 தேர்வில் 1095 மார்க் எடுத்திருந்தார். நீட் தேர்வில் 427 மார்க் கிடைத்தது. இதனால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மாணவிக்கு வாய்ப்பு கைநழுவுகிறது. இதனால் அவரும் மனவேதனையில் உள்ளார்.

    நீட் தேர்வு சம்பந்தமாக ஆசிரியர் ஒருவர் கூறும் போது தமிழக அரசின் தற்போதைய பாட திட்டத்தின்படி இதில் படிக்கும் மாணவர்கள் ஒரு போதும் நீட் தேர்வுக்கு முறையாக தயாராக முடியாது.

    எனவே, பாட திட்டங்களை மாற்றினால்தான் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும் என்று கூறினார்.
    Next Story
    ×