search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் மீன் வளர்ப்பு நிலையத்தில் ஆண்டுக்கு 487 டன் மீன் பிடிக்கப்படுகிறது: கலெக்டர் தகவல்
    X

    பவானிசாகர் மீன் வளர்ப்பு நிலையத்தில் ஆண்டுக்கு 487 டன் மீன் பிடிக்கப்படுகிறது: கலெக்டர் தகவல்

    பவானிசாகர் மீன் வளர்ப்பு நிலையத்தில் ஆண்டொன்றுக்கு 487 டன் அளவிற்கு மீன் பிடிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பிரபாகரன் தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மீன்வளத் துறையின் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் மையத்தை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பவானிசாகரில் உள்ள நன்னீர் உயிரின ஆராய்ச்சி நிலையம் மீன் வளத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு நுண் மீன் குஞ்சு உற்பத்தி, மீன் குஞ்சு வளர்த்தெடுத்தல், மீன்வள மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    பவானிசாகர் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் மையம் மாநிலத்திலேயே மீன் குஞ்சு உற்பத்தியில் முன்னோடி மையமாக செயல்பட்டு வருகிறது. பவானிசாகரில் மூன்று வெவ்வெறு இடங்களில் மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு புங்கார் மீன் பண்ணை 19.60 ஹெக்டேர் பரப்பளவிலும், பழைய மீன் பண்ணை 1.40 ஹெக்டேர் பரப்பளவிலும், தேசிய மீன் விதைப்பண்ணை 10.00 ஹெக்டேர் பரப்பளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    புங்கார் மீன்பண்ணையில் சினை மீன்கள் சினை மீன் குளங்களில் வைத்து பராமரிக்கப்பட்டும், நர்சரி குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பழைய மீன்பண்ணையில் நுண் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யும் பணியும், நர்சரி குளங்களில் மீன்குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    தேசிய மீன்விதைப் பண்ணையில் நுண்மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்த்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பழைய மீன்பண்ணை மற்றும் புங்கார் மீன்பண்ணையில் மீன்வள மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது.

    பவானிசாகர் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் மையத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.90.23 கோடி மதிப்பீட்டில் நுண் மீன் குஞ்சுகளும், ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் இள மீன் குஞ்சுகளும், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் விரலளவு மீன் குஞ்சுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.17.80 லட்சம் மதிப்பீட்டில் தரமான சினை மீன்களை உற்பத்தி செய்தல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ரூ.11.63 லட்சம் மதிப்பீட்டில் தாய் மீன்களுக்கு மின்னணு குறியீடு மூலம் அடையாளமிடுதல் தொடர்பான ஆராய்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது.

    தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.5.05 கோடி திட்ட மதிப்பீட்டில் தேசிய மீன் விதைப்பண்ணையில் மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் புதுப்பிக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டும், ரூ.44.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பழைய மீன் பண்ணையில் 2 சீன மீன் குஞ்சு உற்பத்தி பொரிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது.

    நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.9.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புங்கார் மீன் பண்ணையில் மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.4.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு பழைய மீன் பண்ணையில் மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ஆகியவை புதிதாக கட்டப்பட்டும், ரூ.4.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய மீன்விதைப் பண்ணையில் மீன்வளர்ப்பு குளங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் ரூ.3.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய மீன் விதைப்பண்ணையில் மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த வளர்ச்சிப்பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் மூலம் இந்த நிலையத்தில் ஒரு வருடத்திற்கு 1,700 லட்சம் நுண் மீன் குஞ்சு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு 487 டன் அளவிற்கு மீன்பிடிக்கப்படுகிறது.

    மேலும் இந்த நிலையங்களில் 180 லட்சம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.

    Next Story
    ×