search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 சதவீத அரசு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம்: 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 300 பேர் கைது
    X

    50 சதவீத அரசு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம்: 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 300 பேர் கைது

    புதுவை மாநில தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதால் மூன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடை பெற வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் அரசே விலகிவிடு, கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை கண்டிக்கிறோம். வெட்கக்கேடு, வெட்கக்கேடு நீட் தேர்வு தொடர்பாக புதுவை மாநிலத்திற்கு எதுவும் செய்யாமல் தி.மு.க. போராட்டத்தை ஆதரிப்பது வெட்கக்கேடு என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    போராட்டத்தை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை தபால்நிலையம் முன்பு தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்தனர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 3 எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை பெறாமலும், நீட் தகுதி தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு பெற எந்தவித நடவடிக்கை எடுக்காமலும் உள்ளது.

    நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடத்திற்கு துணை போகும் முதல்-அமைச்சர் நாராயணசாமியை கண்டிக்கிறோம். 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆயிரத்து 50 இடங்களில் அரசு இடஒதுக்கீடாக 525 இடங்களை பெற வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் 288 இடங்களைத்தான் பெற்று வந்தனர்.

    இந்த ஆண்டு 165 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர். தமிழகத்தில் சுய நிதி கல்லூரிகளில் 65 சதவீத இடத்தை ஆண்டுதோறும் அ.தி.மு.க. பெற்று வருகிறது. இந்த ஆண்டு புதுவையில் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் அரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

    நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடங்களை பெற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை பெற சட்ட வடிவத்தை சட்டமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் பல முறை வலியுறுத்தினோம். ஆனால் அரசு அதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறு முயற்சிகள்கூட செய்யவில்லை.

    மாணவர் விரோத ஆட்சி நடத்தும் புதுவை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசை முடக்கம் செய்ய வேண்டும். தமிழக கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் புதுவை மாநிலம் இருக்கும் நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் அரசு ஏன் தமிழகத்தை பின்பற்றவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் பரசுராமன், துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், அணி செயலாளர்கள் பாப்புசாமி, சுப்பிரமணியன், ஞானவேலு, தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்முருகன், நாராயணன், பொன்னுசாமி, கலியபெருமாள், தமிழ்செல்வன், ஜானிபாய், நெல்லித்தோப்பு தொகுதி சார்பில் அன்பழகன் உடையார், இளங்கோவன், டாக்டர் கணேஷ், ஆர்.ஜி.எம். சண்முகம், செந்தில்முருகன், பி.டி. ராஜேந்திரன், மலர், கோவிந்தன், கனகராஜ், பி.கே. ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×