search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது நாளாக டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
    X

    2-வது நாளாக டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை

    ஜெயங்கொண்டம் அருகே 2-வது நாளாக டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாரியங்காவல்:

    நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை யடுத்து ஜெயங்கொண்டம் நகரில் இருந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டன. இந்நிலையில் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு-மலங்கன்குடியிருப்பு கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள வயல் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று மலங்கன்குடியிருப்பு வழியாக வந்தது. அப்போது அந்த லாரியை கிராமமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரி டிரைவர் மதுபாட்டில்களை இறக்காமல் திரும்பி சென்றுவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அன்று இரவே போலீசார் பாதுகாப்புடன் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடையில் இறக்கி வைக்கப்பட்டன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறினார். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை இயங்கியது. மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கீழக்குடியிருப்பு, மலங்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் 2-வது நாளாக நேற்று டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் 15 நாட்களுக்கு கடையை நடத்த கிராம மக்களிடம் அனுமதி கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து கிராமமக்கள் கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடந்த பேச்சுவார்த்தையில் வருகிற 31-ந்தேதிக்குள் கடையை மூடிவிடுகிறோம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×