search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டம் டிசம்பர் மாதம் முடிவடையும்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
    X

    தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டம் டிசம்பர் மாதம் முடிவடையும்: சட்டசபையில் அமைச்சர் தகவல்

    தாம்பரம் பாதாள சாக்கடை திட்டம் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று சட்டபேரவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது எஸ்.ஆர். ராஜா (தி.மு.க.) பேசுகையில், தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், வருகிற டிசம்பர் மாதம் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    எஸ்.ஆர்.ராஜா:- தாம்பரம் பாதாள சாக்கடை திட்டம் தி.மு.க. ஆட்சியில் இந்தியாவிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பங்களிப்புடன் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் நகராட்சியில் நேரடியாக மக்களிடம் பணத்தை வசூலித்து வங்கியில் டெபாசிட் செய்து 2008-ல் திட்டம் தொடங்கப்பட்டது. 10 ஆண்டு ஆகியும் பாதாள சாக்கடை திட்டம் முடிவடையவில்லை.

    மேற்கு தாம்பரத்தில் 90 சதவீத பணி முடிவடைந்து விட்டது. இப்போது அங்கு பணி வேகமாக நடக்கிறது. எனவே 2 மாதத்தில் வேலையை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வர வேண்டும்.

    கிழக்கு தாம்பரத்தில் பணிகள் தொய்வாக நடக்கிறது. நகராட்சி மேற்பார்வையில் சாதாரண ஒப்பந்ததாரரை வைத்து வேலை நடக்கிறது. மெட்ரோ வாட்டரில் ஓய்வு பெற்ற அதிகாரியை வைத்து 3 மாதத்தில் வேலையை முடிக்க வேண்டும், சுத்திரிகரிப்பு நிலையத்தின் தரம் சரியில்லை. எனவே அமைச்சரே நேரில் ஆய்வு செய்து 3 மாதத்தில் திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும்.

    தாம்பரம் பஸ் நிலையத்தை மாற்றி, பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. அங்கு பஸ் நிலையமும் அவசியம், வாகன நிறுத்தும் இடமும் அவசியம். எனவே எது வேண்டும் என்பதை அங்குள்ள பொதுமக்கள், வியாபாரிகளுடன் கலந்து பேசி அரசு முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கையில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறுவது குறித்து புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறி டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்றார்.

    பஸ் நிலைய பிரச்சினைகள் குறித்தும் உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×