search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரி வறண்டு குட்டையாக மாறியது - குடிநீருக்கு மோட்டார் மூலம் வெளியேற்றம்
    X

    புழல் ஏரி வறண்டு குட்டையாக மாறியது - குடிநீருக்கு மோட்டார் மூலம் வெளியேற்றம்

    புழல் ஏரி வறண்டு குட்டையாக மாறியதை அடுத்து ராட்சத மின் மோட்டார் வைத்து பைப் மூலம் உறிஞ்சி சென்னை குடிநீர் தேவைக்காக அனுப்பி வருகிறார்கள்.
    சென்னை:

    பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. பூண்டி ஏரியிலும் தண்ணீர் இருப்பு குறைந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது.

    தற்போது புழல் ஏரியில் 94 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. (ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி). இந்த நீர் ஏரியின் ஒரு பகுதியில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது.

    அதனை ராட்சத மின் மோட்டார் வைத்து பைப் மூலம் உறிஞ்சி சென்னை குடிநீர் தேவைக்காக அனுப்பி வருகிறார்கள். இந்த நீரை இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே எடுக்க முடியும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 49 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. குட்டையாக தேங்கி நிற்கும் இந்த தண்ணீர் அங்குள்ள சிறிய கால்வாய் மூலம் கொண்டு வரப்பட்டு குடிநீருக்காக சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நீரும் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே எடுக்க முடியும்.

    சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விட்டதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கல்குவாரியில் தேங்கிய மழைநீரை சுத்திகரித்து சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 9-ந்தேதி முதல் கல்குவாரியில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இது சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை முழுவதும் பூர்த்தி செய்யுமா? என்பது சந்தேகமே. தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×