search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா?: திருநாவுக்கரசர்
    X

    யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா?: திருநாவுக்கரசர்

    இறைச்சிக்காக மாடுகள் வெட்ட மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா? என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தையொட்டி சத்திய மூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் நேரு. இந்த நாளில் நாடு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.

    தற்போது மத்தியில் ஆளும் அரசு மக்கள் நலனை செயல்படுத்தாத அரசாகவும், பிரச்சினைகளை கண்டு கொள்ளாத அரசாகவும் உள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மோடி இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு தடை விதித்துள்ளார். இதுவா இப்போது முக்கியம். யார் என்ன சாப்பிட வேண்டும். எப்போது சாப்பிட வேண்டும். எதை சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் மோடியும் அமித்ஷாவுமா முடிவு செய்வது? என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.


    கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. வரும் 2 ஆண்டுகளில் மொத்த செல்வாக்கையும் இழந்து விடும். அதன் பிறகு ராகுல் காந்தி பிரதமர் ஆவார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க., பாரதிய ஜனதாவின் பிடியில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கட்சியை உடைக்கப் பார்த்தார்கள். இப்போது உடைந்த கட்சியை ஒன்று சேர்த்து காலூன்ற பார்க்கிறார்கள். எக்காரணத்தை கொண்டும் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது.

    பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால் முக்கிய பிரச்சினைகளிலும் அ.தி.மு.க.வால் எதிர்த்து குரல் கொடுக்க முடியவில்லை.

    சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் படங்களை வைப்பது மரபுதான். ஆனால் ஜெயலலிதாவை பொறுத்தவரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர். எனவேதான் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இது தொடர்பாக கோர்ட்டு தான் உரிய வழிமுறைகளை காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமரி அனந்தன், கோபண்ணா, முன்னாள் எம்.பி. விஸ்வ நாதன், கீழானூர் ராஜேந்திரன், துறைமுகம் ரவிராஜ், விஷ்ணு பிரசாத், ஐஸ்அவுஸ் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×