search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: தலைவர்கள் கண்டனம்
    X

    இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: தலைவர்கள் கண்டனம்

    இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்:-

    கால்நடைகளை வைத்து அரசியல் நடத்துவதன் மூலம் மக்களிடம் பிளவை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெற்றுக் கொண்டிருக்கும் பாஜக, இந்திய நாடு முழுவதும் கால்நடை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக விவசாயிகளை பாதிக்கும். மத்திய அரசின் இந்த சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது.

    இந்திய விவசாயிகளுக்கு மிகக்கடுமையான நஷ்டத்தையும், சமூக பதட்டத்தையும் , பொருளாதார இழப்புகளையும் உருவாக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென அனைத்து ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-




    மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ள அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு வளையம் உடைத்து நொறுக்கப்படுகிறது. என்ன சாப்பிட வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்ன எழுத வேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும் என எல்லாவற்றையும் ‘இந்துத்துவா’ சக்திகளே தீர்மானிக்கும் ஏதேச் சதிகார உச்சத்திற்கு மோடி அரசு சென்றிருக்கிறது.

    மோடி அரசின் மக்கள் விரோதச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு கட்சி அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-



    மத்திய அரசின் ஆணை, சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு எதிராக மட்டுமல்ல நாட்டில் வாழக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என இந்தியாவில் மாட்டிறைச் சியை உண்ணக்கூடிய ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையாகவே மனித நேய மக்கள் கட்சி கருதுகிறது. மத்திய பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்பாணையை மனித நேய மக்கள்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    இந்தத் தடையானது நாட்டு மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிடுவது மட்டுமல்லாமல் நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும், மாட்டிறைச்சி தடை போன்ற ஆணைகளால் நாட்டின் மதச்சார்பின்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும்.

    எனவே மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்றும், தமிழக அரசு இந்தத் தடை ஆணையை அமல்படுத்த முடியாது என அறிவித்து அதில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும், மதச்சார்பற்ற அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் நின்று மோடி அரசின் இந்தப்பாசிச ஆணையை எதிர்த்துக் களமாட வேண்டும் மென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    அகில இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் இனாயத்துல்லாஹ்:-

    ஜனநாயக நாட்டில் தனி மனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இது போன்ற உத்தரவுகளை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க.விற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தலித், இஸ்லாமிய மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களும் மரண அடி கொடுப்பார்கள்.
    Next Story
    ×