search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகர குடிநீருக்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரி தண்ணீர் வினியோகம்
    X

    சென்னை மாநகர குடிநீருக்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரி தண்ணீர் வினியோகம்

    சென்னை மாநகர குடிநீருக்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் 30 மில்லியன் லிட்டர் வீதம் 100 நாட்களுக்கு கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகரில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 24,712 தெருக்குழாய்களும் உள்ளன. இதற்கு தேவையான தண்ணீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்டு வந்தது.

    பருவமழை பொய்த்துப்போனதால் சோழவரம் ஏரி 3 மாதத்திற்கு முன்பே வறண்டுவிட்டது. எஞ்சிய 3 ஏரிகளிலும் சேர்த்து 432 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனை வைத்துக்கொண்டு இம்மாதம் முழுவதும் தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடல்நீரை குடிநீராக்கும் மையம் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

    சென்னை குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக சென்னையின் புறநகர் பகுதிகளான மாங்காட்டில் உள்ள 22 கல்குவாரிகள், திருநீர்மலையில் 3, பம்மலில் 3, நன்மங்கலத்தில் 3 உள்பட 31 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குவாரிகளின் தண்ணீர் குடிநீருக்கு உகந்ததா? என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தை சுற்றியுள்ள 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது.

    கல்குவாரியில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரியில் உள்ள சிவில் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் சில குவாரிகளில் நீரூற்றுகள் இருப்பது தெரியவந்தது. இந்த கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை லாரிகளில் எடுத்துச்செல்வதா? அல்லது குழாய்கள் மூலம் கொண்டுசெல்வதா? என்ற குழப்பம் ஏற்பட்டது.

    இறுதியாக குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடைந்த உடன் சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதற்காக 22 கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இதற்காக 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடையும்.

    ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரிகளில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர் வீதம் 100 நாட்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை மாநகர குடிநீருக்கு வினியோகம் செய்யப்படும். இதுதவிர போரூர் ஏரியில் இருந்து 100 நாட்களுக்கு தினசரி 4 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் எடுப்பதற்காகவும் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியும் இம்மாத இறுதியில் நிறைவுபெறும்.

    குடிநீர் தேவை அதிகரிப்பு காரணமாக வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. எனவே 8 மணி நேரத்துக்கு ஒரு முறை தான் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதிகளவில் தண்ணீர் எடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. அவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×