search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரி
    X
    புழல் ஏரி

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் - கல்குவாரி குட்டை நீர் கைகொடுக்குமா?

    பூண்டி உள்ளிட்ட 4 ஏரிகளில் உள்ள தண்ணீரை கொண்டு ஒரு மாத குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கல்குவாரி குட்டை நீரை முழுமையாக பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முக்கிய ஏரிகளாக உள்ளன. இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்தது. தற்போது நான்கு ஏரிகளிலும் 801 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த பிப்ரவரி மாதமே வறண்டது. இதன் காரணமாக வீராணத்தில் இருந்து தினமும் கிடைத்து வந்த 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வராததால் குடிநீர் வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதேபோல் ஆந்திராவில் வறட்சி நிலவியதால் பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரும் நிறுத்தப்பட்டது.


    சோழவரம் ஏரி வறண்டுள்ளதை படத்தில் காணலாம்

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரி கடந்த மாதமே வறண்டுவிட்டது. பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்.

    பூண்டி ஏரியின் நீர்மட்டம் 18 அடிக்கு கீழ் சென்றதால் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியவில்லை. பேபி கால்வாய் மூலம் 10 கனஅடி மட்டுமே சென்னை மெட்ரோ போர்டுக்கு திறந்து விடப்படுகிறது.

    சென்னைக்கு தினமும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த பிப்ரவரி மாதமே குடிநீர் வினியோகிக்கும் அளவை 550 மில்லியன் லிட்டராக குடிநீர் வாரியம் குறைத்து கொண்டது.

    இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் குடத்துடன் அலைவதை காண முடிகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று வழியை குடிநீர் வாரிய அதிகாரிகள் நாடி உள்ளனர்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள், கல்குவாரி குட்டைகள், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் உள்ள தண்ணீர் மற்றும் போரூர் ஏரியில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

    விவசாய கிணற்று நீர் மற்றும் நெய்வேலி சுரங்க தண்ணீரை சென்னைக்கு கொண்டு வர ஏற்கனவே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    எனவே கல்குவாரி குட்டை நீர், போரூர் ஏரி நீரை முழுமையாக பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இந்த தண்ணீர் கைகொடுத்தால் மட்டுமே சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்.

    இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மீஞ்சூர், நெம்மேலியில் இயங்கும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் என 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.

    இதேபோல் பரவனாறு மற்றும் நெய்வேலி பகுதியில் இருந்து 60 மில்லியன் லிட்டர், விவசாய கிணறுகள் மூலம் 100 மில்லியன் லிட்டரும், ஏரிகளில் இருந்து 190 மில்லியன் லிட்டரும் தினமும் எடுக்கப்படுகிறது. இதனால் தினமும் தேவைப்படும் 550 மில்லியன் லிட்டர் இலக்கை எட்ட முடிகிறது.

    இப்போது பூண்டி உள்ளிட்ட 4 ஏரிகளில் உள்ள தண்ணீரை கொண்டு ஒரு மாத குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும்.

    கல்குவாரி குட்டை, போரூர் ஏரியில் இருந்து நீர் எடுக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடும். ஏரிகளில் நீர் இருப்பு முழுவதும் குறையும் போது இது கைகொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×